×

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் பண்ணை சுற்றுலா திட்டம்

காஞ்சிபுரம், பிப்.27: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், பண்ணை சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுவதாக கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.
தற்போது பெருநகரங்களில் உயர் தொழில்நுட்பங்களின் பயன்பாடுகள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதனால், இயற்கையின் இயல்புகளுடன் ஒன்றி வாழ பெருவாரியான மக்கள் வாய்ப்புகளை இழந்து வருகின்றனர்.
இதனால், நகர்புறங்களில் 80 விழுக்காடு மக்கள் பசுமை சூழலின்றி வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதன் காரணமாக மன அழுத்தம் நிறைந்த சூழல் நகர்வாழ் மக்களுக்கு உருவாகி கொண்டிருக்கிறது.
சமீப காலமாக நகர்ப்புற மக்கள், உணவு எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை அறியாமல் உள்ளனர். இதையொட்டி, உணவு உற்பத்தியில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் தமிழகத்தில் பண்ணை சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம்  பயிர் சாகுபடி முறைகளை பற்றி அறிந்து கொள்ள, பண்ணை சுற்றுலா திட்டம் பேருதவியாக அமையும். மேலும், தோட்டக்கலை பயிர் சாகுபடியில் உள்ள புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளவும், தங்களுடைய விவசாயத்தில் பயன்படுத்தவும் பண்ணை சுற்றுலா ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். இதன் மூலம் மாணவ, மாணவிகள், பொது மக்கள் அனைவரும் தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள அரசு தோட்டக்கலை பண்ணைகளுக்கு சென்று தோட்டக்கலை பண்ணைகளின் செயல்பாடுகள், பயிர்சாகுபடி முறைகள், நாற்றுகள் உற்பத்தி செய்யும் முறைகள், இயற்கை சார்ந்த தோட்ட அமைப்பு ஆகியவற்றை கண்டு களிப்பதோடு, அவற்றை பற்றி அறிந்து கொள்ளவும் நல்ல வாய்ப்பாக அமையும். இதற்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ₹50, சிறியவர்கள், மாணவ, மாணவிகளுக்கு ₹25 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு தோட்டக்கலை பண்ணைகளுக்கு வருபவர்களுக்கு புத்துணர்வூட்டும் விதமாக இளநீர், எலுமிச்சை பானகம் உள்ளிட்ட இயற்கையான பானங்கள், ஆரோக்கிய தின்பண்டங்கள் வழங்கப்படும். பண்ணையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து தோட்டக்கலை அலுவலரால் விளக்கப்படும்.

பண்ணை நாற்றங்கால் பகுதியில் செடிகள் உற்பத்தி முறைகள் பற்றி செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்படும். பண்ணை முழுவதும் சுற்றி காண்பித்து, தோட்டக்கலை பயிர்களை விளக்கமாக அறிமுகப்படுத்துவதுடன், அவற்றின் பயன்பாடுகள் பற்றியும் எடுத்துரைக்கப்படும். இறுதியாக, ஒவ்வொரு பயனாளிக்கும்  தோட்டக்கலை செடிகள் பயிற்சியின் நினைவாக இலவசமாக வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் தங்களது வட்டார அளவில் செயல்படும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட அளவிலான தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயனடைலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags : Mountains ,
× RELATED கொடைக்கானலில் இணக்கமான தட்பவெப்பம்!:...