×

மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மணி நேரம் கூடுதல் சலுகை பிளஸ் 2 தேர்வு 128 மையங்களில் 45,035 பேர் எழுதுகின்றனர்

திருவள்ளூர், பிப். 27: திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு 128 ைமயங்களில் நடக்கிறது. இதில் 45,035 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் நரம்பியல் குறைபாடு உள்ளவர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதல் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 1ல் துவங்கி 19 வரை 128 மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வினை 20,580 மாணவர்கள், 22,107 மாணவியர்கள் என மொத்தம் 45,035 பேர் எழுத உள்ளனர். புழல் சிறைவாசிகளுக்கென மத்திய சிறையில் ஒரு தேர்வு மையம் அமைத்து 126 சிறைவாசிகள் தேர்வு எழுத உள்ளனர். பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளியில் 28 பேர், நேத்ரோதயா சிறப்பு பள்ளியில் 5 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இதேபோல், பிளஸ் 1 தேர்வுகள் வரும் 6ம் தேதி துவங்கி 22ம் தேதிவரை நடைபெறுகிறது. இத்தேர்வினை 119 மையங்களில், 19,280 மாணவர்கள், 22,147 மாணவியர்கள் என மொத்தம் 41,427 பேர் எழுத உள்ளனர்.
10ம் வகுப்பு தேர்வுகள் 14ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வினை 167 மையங்களில் 21,280 மாணவர்கள், 24,855 மாணவியர்கள் என மொத்தம் 46,135 பேர் எழுத உள்ளனர்.
இதில், பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளியில் 19 பேர், நேத்ரோதயா சிறப்பு பள்ளியில் 3 பேர் எழுத உள்ளனர். மேலும், புழல் மத்திய சிறையில் அமைக்கப்படும் தேர்வு மையத்தில் 51 சிறைவாசிகள் தேர்வு எழுத உள்ளனர்.இதற்கென மாவட்டத்தில் 16 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் இருந்து, தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்களை கொண்டுசெல்ல 32 வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, இதை கண்காணிக்க 64 வழித்தட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இம்மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் நரம்பியல் குறைபாடு உள்ள தேர்வர்களுக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேர சலுகை வழங்கப்பட்டு உள்ளதோடு, அதற்கென சொல்வதை எழுதும் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டு உள்ளது.மேலும், ஒழுங்கீன செயல்களை தடுக்க 74 பறக்கும் படையினர், 250 நிரந்தர படையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர வருவாய் மற்றும் காவல்துறை அலுவலர்களும் தேர்வு மையங்களை திடீர் சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.

புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகம்
தேர்வு தொடர்பான புகார்களை ‘1077’ என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். தேர்வு எழுத வரும் மாணவர்கள் தேர்வு அறைக்குள் செல்போன், கால்குலேட்டர், வாட்ச், பென்டிரைவர், பர்ஸ் ஆகியவற்றை கொண்டு செல்ல அனுமதி கிடையாது. மேலும், ஷூ மற்றும் பெல்ட் அணிந்து செல்லவும் அனுமதி கிடையாது.

Tags : recruiters ,centers ,
× RELATED மாவட்டத்தில் 4 மையங்களில் இன்று நீட் தேர்வு