×

பல்லாவரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 வது முறை சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியது


ஆவடி: ஆவடியில் உள்ள பல்லாவரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார்  நேற்று 2வது முறையாக சோதனை நடத்தினர். 5மணி நேரம் நடந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. பல்லாவரம் நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஜெயந்தி. இவர், கட்டிட உரிமம் வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபடுவதாக, சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதனையடுத்து, கடந்த மாதம் 10ம் தேதி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி பாஸ்கரன் தலைமையில் போலீசார், பல்லாவரம் நகராட்சியில் உள்ள ஜெயந்தி அறையில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவரது அறையில் இருந்து 1 லட்சம் ரொக்கப் பணத்தை போலீசார் கைப்பற்றினர். பின்னர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது, அவர் போலீசாரிடம்  பணம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது, என தெரிவித்தார். அப்போது, 60க்கும் மேற்பட்ட கட்டிட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான கோப்புகளை கைப்பற்றினர்.

இந்நிலையில், நகரமைப்பு ஆய்வாளர் ஜெயந்தி மீது மீண்டும் புகார்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து சென்றன. அதன்பேரில், நேற்று காலை 8 மணியளவில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி பாஸ்கரன் தலைமையில் போலீசார் ஆவடி, வீட்டு வசதி வாரிய குடியிப்பில் உள்ள ஜெயந்தி வீட்டிற்கு வந்தனர். பின்னர், அங்கு வீடு முழுவதும் ஒவ்வொரு அறையிலும் சோதனை நடத்தினர்.  மேலும், அவரிடமும்  போலீசார் துருவி துருவி  தீவிர விசாரணை நடத்தினர். மதியம் 1 மணி வரை  சோதனை நடந்தது. இதில், போலீசார் ஜெயந்தி வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்கு அழைத்தால் ஜெயந்தி, சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு  ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்தனர்

Tags : Officer Homes ,Pallavaram Municipal Township ,Check Trial ,
× RELATED பல்லாவரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி...