×

மார்ச் 3ல் கொடியேற்றத்துடன் தொடக்கம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழா அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

குளச்சல், பிப். 27: குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற திருக்கோயில்களுள் ஒன்றான பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு  பகவதியம்மன் திருக்கோயில் மாசிக்கொடை விழா நடைபெறுவதை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்களுடன் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே தலைமையில் மண்டைக்காட்டில் நடைபெற்றது. எஸ்.பி நாத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே பேசியதாவது:
மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோயில் மாசிக்கொடை விழா 03.03.2019 ஞாயிற்றுக்கிழமை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி 10 தினங்கள் சிறப்பாக நடைபெறவுள்ளது. 08.03.2019 வெள்ளிக்கிழமை அன்று வலியபடுக்கை விழாவும், 12.03.2019 செவ்வாய்க்கிழமை அன்று ஒடுக்கு பூஜை விழாவும், 19.03.2019 செவ்வாய்க்கிழமை அன்று எட்டாம் கொடை விழாவும் நடைபெற உள்ளது. குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் இருந்தும் பெருந்திரளான பக்தர்களும் விழாவில் கலந்து கொள்கின்றனர். எனவே, திருக்கோயில் அருகாமையில் இயங்கிவரும் மாலைநேர சந்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுகிறது. வாகனம் நிறுத்த உரிய இடவசதி ஏற்படுத்தப்படுகிறது. காவல்துறை மூலம் திருவிழா காலத்தில், 8ம் கொடை விழா மற்றும் மீனபரணி கொடைவிழா நாட்களில் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 மின்சாரத்துறை மூலம் திருவிழாக் காலங்களில் தங்குத்தடையின்றி மின் அழுத்தம் குறைவின்றி சமச்சீரான மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும், போக்குவரத்துத்துறை மூலம் திருவிழா நடைபெறும் நாட்களில் பக்தர்களின் வசதிக்காக தேவையான சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டுமெனவும்,  பேரூராட்சித்துறை மூலம் வாகனங்கள் செல்லும் நான்கு வீதிகள் மற்றும் பேருந்து நிலையம் முதல் திருக்கோயில் வரையிலான சாலைகளை சீர் செய்திடவும், தெரு வீதிகளை சுத்தமாக பராமரித்திடவும், தற்காலிக கழிவறைகள் அமைத்து, அதற்கு தேவையான தண்ணீரை பீப்பாய்களில் வைத்திடவும், குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைத்திட ஏற்பாடு செய்திட வேண்டுமெனவும், சுகாதா ரத்துறை மூலம் அலுவலர்கள் பக்தர்கள் கூடும் இடங்களில் தேவையான சுகாதார வசதிகள் மற்றும் சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்திடவேண்டுமெனவும், மருத்துவத்துறை மூலம் திருக்கோயிலுக்கு சொந்தமான கட்டிடத்தில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு ஒன்று தற்காலிகமாக அமைத்து மருத்துவ அலுவலர் மற்றும் மருந்தாளுனர் மூலம் தேவையான அவசர மருத்துவ வசதி செய்திட வேண்டுமெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நெடுஞ்சாலைத்துறை மூலம் அனைத்து சாலைகளையும் சீரமைத்து செப்பனிட வேண்டுமெனவும், தீயணைப்புத்துறை மூலம் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி தீயணைப்பு ஊர்திகள் மற்றும் கடலில் நீராடுபவர்களின் பாதுகாப்புக்கு தேவையான படகு மற்றும் நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் வைக்க வேண்டும். கடந்த ஆண்டை போல இவ்வாண்டும் விழா சிறப்பாக நடைபெற அனைத்து துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.முன்னதாக, கோயில் சுற்றுப்புற பகுதியிலும், கடற்கரை பகுதியிலும் கலெக்டர் ஆய்வு செய்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, சப் கலெக்டர் (பத்மநாபபுரம்) ஷரண்யா அறி, சப் கலெக்டர் (நாகர்கோவில்) பவன்குமார் கிரியப்பனவர், உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) கார்த்திகேயன், உதவி காவல் கண்காணிப்பாளர் (குளச்சல்) கார்த்திக், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் மதுசூதனன், நகராட்சி ஆணையர் (குளச்சல்) சரவணகுமார்(பொ), இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்னவேல் பாண்டியன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கண்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரகுபதி, கூடுதல் கண்காணிப்பாளர் விஜய பாஸ்கரன், தாசில்தார் (கல்குளம்) ராஜாசிங் உள்ளிட்ட அனைத்துத்துறைஅலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Collector ,consultation ,mosquito ceremony officials ,Mantikadu Bhagavathi Amman Temple ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...