×

வீரகனூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

கெங்கவல்லி, பிப்.27: வீரகனூர் பகுதியில் குடிநீர் விநியோகம் சீர்செய்யக்கோரி காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கெங்கவல்லி தாலுக்கா வீரகனூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு வீட்டு இணைப்புகள் மட்டுமின்றி, பொது குடிநீர் குழாய்கள் மூலமும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. மேலும், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு தனி குடிநீர் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு சில நாட்களாக சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நேற்று பேரூராட்சி அலுவலகம் முன் 50க்கும் மேற்பட் பெண்கள் திரண்டனர். பின்னர், காலி குடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்கள் கூறுகையில், தேர்வு நேரம் என்பதால் குழந்தைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளிக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதேபோல், வீட்டு ஆண்டுகளையும் சரியான நேரத்திற்கு வேலைக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால், காலை கடன்களை முடிப்பதற்கு மற்றும் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாத நிலை உள்ளதால் காலை வேளையில் அனைத்து பணிகளும் பாதிப்பிற்குள்ளாகி தவித்து வருகிறோம். இதுகுறித்து வீரகனூர் பேரூராட்சி செயல் அலுவலரான சண்முகசுந்தரியிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களிடம் செயல் அலுவலர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, குடிநீர் சப்ளையை சீர்செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Veeraganur ,
× RELATED வீரகனூர் அருகே மது விற்ற வாலிபர் கைது