×

ஜிஎஸ்டி நீக்க கோரி விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையம்,பிப்.27: விசைத்தறி ஜவுளித்தொழில் மீதான ஜிஎஸ்டி வரியை முற்றிலும் நீக்க வலியுறுத்தி, பள்ளிபாளையத்தில் நேற்று விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில், நாமக்கல் மாவட்ட சிஐடியூ விசைத்தறி தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக அரசு வழங்கும் சிறப்பு நிதியான 2 ஆயிரம் அனைத்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். விசைத்தறி தொழிலாளர்களின் 75 சதவீத கூலி உயர்வு கோரிக்கையை விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும். குமாரபாளையம் தொகுதியில் அறிவிக்கப்பட்ட பொது சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக அமைக்க வேண்டும். விசைத்தறிக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை 1000 யூனிட்டாக உயர்த்த வேண்டும். விசைத்தறி ஜவுளித்தொழில் மீதான ஜிஎஸ்டி வரியை முற்றிலும் நீக்க வேண்டும். விசைத்தறி தொழிலாளர்களுக்கு 8மணி நேரம் வேலை, மாதம் 18 ஆயிரம் ஊதியம், 58 வயதிற்கு பின் மாதம் 6 ஆயிரம் ஓய்வூதியம், ஈஎஸ்ஐ, பஞ்சப்படி, பசுமை வீடு, கல்வி உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றிய தலைவர் அசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் மோகன், சிஐடியூ மாவட்ட செயலாளர் வேலுசாமி, விசைத்தறி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அசோகன், முத்துகுமார், சண்முகம், குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

Tags : delegation ,GST ,LLRC ,
× RELATED ஜிஎஸ்டி குறித்து கேள்வி கேட்ட பெண்ணை...