×

விபத்தில் இழப்பீடு வழங்காததால் ராசிபுரத்தில் அரசு பேருந்து ஜப்தி

ராசிபுரம்,பிப்.27:  விபத்து வழக்கில் 3.65 லட்சம் இழப்பீடு தொகை வழங்காத அரசு போக்குவரத்து கழக  பேரூந்தை, ராசிபுரத்தில் நேற்று நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.நாமக்கல்  மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள ஆயில்பட்டி அடுத்த கார்கூடல்பட்டி  ராஜாபாளையத்தை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மணைவி சின்னம்மாள்(52). இவர்  கடந்த 2011 ஜூன் மாதம்  ராசிபுரம் -ஆத்தூர் சாலையில் உள்ள தனியார்  மருத்துவமனையின் முன்பு, ராசிபுரத்தில் இருந்து மங்களபுரம் செல்லும் அரசு  பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்தார். இதுகுறித்து  ராசிபுரம் காவல் துறையினர் வழக்குபதிவு செய்தனர். அரசு போக்குவரத்து  கழகத்திடம், சின்னம்மாள் மரணத்துக்கு விபத்து நஷ்டஈடு கோரி, சின்னபையன்  ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை  விசாரித்த அப்போதைய நீதிபதி சீத்தாராமன், கடந்த 2015 பிப்ரவரி மாதம்  விபத்தில் உயிரிழந்த சின்னம்மாள் குடும்பத்துக்கு 3.64 லட்சம் இழப்பீடு  தொகையை வழங்கும்படி, அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்திரவிட்டார்.

ஆனால், போக்குவரத்து கழகம் உரிய இழப்பீடு தொகையை வழங்கவில்லை. இதையடுத்து  சின்னபையன் நிறைவேற்று மனுவை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன்  பின்னரும் உரிய தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்கவில்லை. இதையடுத்து  இழப்பீடு வழங்காத அரசு பேருந்தை ஜப்தி செய்யும்படி நீதிபதி பிரபாசந்திரன்  உத்திரவிட்டார். இதையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் நேற்று ராசிபுரம் புதிய பஸ்  நிலையத்திற்கு வந்த கொல்லிமலை அரசு பேருந்தை ஜப்தி செய்து,  நீதிமன்றத்திற்க்கு எடுத்து சென்றனர்.

Tags : state bus japti ,Rasipuram ,accident ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து