×

மார்ச் 6ம் தேதி விருதுநகரில் தென்மண்டல திமுக மாநாடு 85 ஏக்கர் மைதானத்தில் நடக்கிறது: 2 லட்சம் பேர் பங்கேற்பு ஆலோசனைக் கூட்டத்தில் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்

விருதுநகர், பிப். 27: விருதுநகர் கந்தசாமி மண்டபத்தில் திமுக தென்மண்டல திறந்தவெளி மாநாடு தொடர்பாக, விருதுநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன், தெற்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், ‘மார்ச் 7ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பும், 21 சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பும் வரலாம். இதை மையமாக வைத்து விருதுநகரில் மார்ச் 6ம் தேதி தென்மண்டல திறந்த வெளி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை தமிழகமே திரும்பி பார்க்கும் வகையில் நடத்த இருக்கிறோம். திமுக தலைமையிலான கூட்டணி 40க்கு 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 21க்கு 21 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் திமுக ஆளும்கட்சியாக வரமுடியும். தேர்தலில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும்.

நான்குவழிச்சாலையில் துலுக்கபட்டிக்கும் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கும் இடையே 85 ஏக்கரிலான இடத்தில் 20 ஏக்கரில் நிகழ்ச்சியும், 65 ஏக்கரில் கார்நிறுத்துமிடம் அமைய உள்ளது. கார் பார்க்கிங் பகுதியில் 3 ஆயிரம் விளக்குகளும், நிகழ்ச்சி அரங்கில் 2 ஆயிரம் விளக்குகள் என மொத்ததம் 5 ஆயிரம் மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. 2 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் திறந்தவெளி மாநாட்டு திடல் ஏற்படுத்தப்படுகிறது. மாநாட்டு திடல் முகப்பு 500 அடி அகலத்திற்கு அமைக்கப்படும். எங்கிருந்தும் நிகழ்ச்சியை பார்க்கும் வகையில் எல்இடி டிவிக்கள் வைக்கப்படும். 20 கி.மீ தூரத்திற்கு 7ஆயிரம் கொடிகள் சாலையோரத்தில் நடப்படும். மிகப்பெரிய பிரமாண்டமான அளவில் மாநாடு நடத்த உள்ளோம். மாலை 4 மணிக்கு துவங்கி 7.30 மணிக்கும் மாநாடு நிறைவடையும்’ என்றார்.

வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு பேசுகையில், ‘விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மட்டும் ஒரு லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் லட்சத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். தேர்தலில் பல்வேறு கூட்டணிகள் வருகின்றன. திமுக மக்களுடன்தான் கூட்டணியாக உள்ளது. 2004 மாநாடு சாதனையை முறியடிக்கும் மாநாடாக மார்ச் 6 திறந்த வெளி மாநாடு அமைய வேண்டும். அன்றைய தினத்தில் மொத்த இந்தியாவிற்குமான செய்தியை தலைவர் ஸ்டாலின் தெரிவிக்க இருக்கிறார். எம்பி தேர்தலில் பெற உள்ள வெற்றியை தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கும் ஓங்கி ஒலிக்கும் அளவிற்கு மாநாடு இருக்கும் என்றார். ஆலோசனை கூட்டத்தில் எம்எல்ஏக்கள் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், தங்கப்பாண்டியன், நிர்வாகிகள் வி.பி.ராஜன், குன்னூர் சீனிவாசன் உள்ளிட்டோர் உரையாற்றினர். நகர, ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : convention ,DMRC ,stadium ,participants ,Virudhunagar ,meeting ,occasion ,Sathur Ramachandran ,
× RELATED அணியின் நலனுக்காக புதிய...