மூணாறு அருகே உடையும் நிலையில் பார்வதி டிவிஷன் பாலம் சரிசெய்ய தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை

மூணாறு, பிப். 27: மூணாறில் அதிகம் தோட்ட தொழிலாளர்கள் குடியிருக்கும், லட்சுமி எஸ்டேட் பார்வதி டிவிஷன் செல்லும் பாலம் உடையும் நிலையில் உள்ளது. பாலத்தை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மூணாறு அருகே அமைந்துள்ளது லட்சுமி எஸ்டேட். இப்பகுதியில் சிவன்மலை, நாகர்முடி, ஒத்தப்பாறை, பார்வதி போன்ற தோட்ட தொழிலாளர்கள் குடியிருக்கும் எஸ்டேட் பகுதிகள் அமைந்துள்ளன. ஏராளமான தொழிலாளர்கள் குடியிருப்புகளும் முக்கிய சுற்றுலா விடுதிகளும் உள்ளன. இத்தகைய முக்கியமான பகுதியில் அமைந்துள்ள பாலம் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. தினமும் ஏரளமான சுற்றுலா வாகனங்கள் மற்றும் தொழிலாளர்கள் வாகனங்கள் பள்ளி குழந்தைகளின் வாகனங்கள் இந்த பாலம் வழியாகத்தான் கடந்து செல்கின்றன. எப்போதும் வாகனங்கள் பரபரப்பாக செல்லும் இந்த பாலம் எப்பொழுது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. பாலத்தின் ஒரு பகுதி முற்றிலும் சேதமடைந்து காணப்படுவதால் இப்பகுதி வாகன ஓட்டுனர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இரண்டு வருடங்களுக்கு மேலாக உடைந்த நிலையில் காணப்படும் இந்த பாலத்தை சரிசெய்ய வலியுறுத்தி தனியார் தேயிலை தோட்ட நிறுவனம் மற்றும் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் தட்டிக்கழித்து வருவதாக வாகன ஓட்டுனர்கள் கூறுகின்றனர். மேலும் அவசர கால சிகிச்சைக்கு நோயாளிகளை உயிர் பயத்துடன் இந்த பாலம் வழியாக கொண்டு செல்ல வேண்டியுள்ளதாக கூறினார். இரவு நேரங்களில் இந்த பாலத்தில் பல விபத்துகளும் அரங்கேறியுள்ளது. மேலும் இந்த பாலத்தை குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘சனிக்கிழமை இரவு இப்பகுதியில் தொழிலாளி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த வந்த தீயணைப்பு வாகனம் இந்த பாலத்தில் விபத்துக்குள்ளாகி பின்னர் பொதுமக்கள் உதவியுடன் வாகன கடந்து சென்றது. உரிய அதிகாரிகள் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு பாலத்தை சரிசெய்ய முன் வரவேண்டும். இல்லாத பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றனர்.

Related Stories:

>