×

ஆண்டிபட்டி கல்லூரியில் குடிநீர் வழங்கக் கோரி வகுப்புகள் புறக்கணிப்பு

ஆண்டிபட்டி, பிப். 27:  ஆண்டிபட்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுபு  கலைக்கல்லூரியில் பல மாதங்களாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து மாணவ, மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆண்டிபட்டியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுபு கல்லூரி உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 20க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் வேலை செய்கின்றனர். இங்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. மேலும் கல்லூரிக்கு சுற்றுச்சுவர் இல்லாமல் பாதுகாப்பின்றி உள்ளது. கல்லூரிக்கு அடிப்படை வசதி செய்து தரக்கோரி சில மாதங்களுக்கு முன்பு மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உரிய அடிப்படை வசதி செய்து தரப்படும் என்று கூறியதை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்நிலையில் கல்லூரி வளாகத்துக்குள் குடிநீர் தொட்டி, குடிநீர் டேங் அமைத்தும், இதுவரை குடிநீரை விநியோகிக்கவில்லை. இது குறித்து கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம், சம்பந்தபட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.  இதனால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் குடிநீர் வழங்கக் கோரியும், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நேற்று காலை 9.30 மணியளவில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்ில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் அமர்ந்த மாணவ, மாணவிகள் குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

ஆண்டிபட்டி தாசில்தார் அர்ச்சுணன், வட்டார வளர்ச்சி அலுவலர் எபி, ஆண்டிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். கல்லூரிக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதைதொடர்ந்து 3 மணி நேரம் போராட்டத்திற்கு  பின்னர் மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர்.

Tags : Andipati College ,
× RELATED ஆன்லைனிலே மீண்டும் வீட்டு வரி பெயர் திருத்தம் வசதி வேண்டும்