×

பாமக.வுடன் அதிமுக கூட்டணியை ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேட்டி

மதுரை, பிப். 27: பாமகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததை, ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என்று அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்தார். மதுரையில் நேற்று அவர் கூறும்போது, ‘‘அதிமுக - பாமக கூட்டணியில் அதிக அளவு பணம் கைமாறியுள்ளது. மாற்றம் முன்னேற்றம் ஏமாற்றம் என்ற நிலையில் தற்போது அன்புமணி உள்ளார். ரூ.300 கோடி முதல் ரூ.500கோடி வரை பாமக வாங்கி இருக்க வாய்ப்பு உள்ளது. பெரிய கூட்டணி அமைந்தது போல அதிமுக அவர்களாகவே பெருமையடித்து கொண்டு வருகின்றனர். பாமகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் விலகி வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சேர்ந்ததால் பாமக அழிந்துபோகும் நிலைக்கு போயிருக்கிறது. டெண்டர்களுக்காகவே ஒரு சில அதிமுக நிர்வாகிகள் எடப்பாடியுடன் உள்ளனர்.

ஜெயலலிதாவால் வந்தவர்கள் என கூறும் இவர்கள் ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக கூட்டணி அமைத்து வருகிறார்கள். பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சகோதரர் மணி மூலமாக 2015ல் அப்போதைய கர்நாடக முதல்வர் சீத்தாராமய்யாவை சந்தித்து, ஜெயலலிதா நிரபராதி என்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும் என மனு அளித்தவர். ஜெயலலிதாவிற்கு எதிராக செயல்பட்டவர்கள் பாமகவினர். ஜெயலலிதா குறித்து தவறான கருத்துகளை வெளியிட்ட பாமக ராமதாசுடன், எடப்பாடி பழனிச்சாமி இன்று கூட்டணி வைத்துள்ளார். பாமகவுடன் கூட்டணி வைத்ததை, ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது. அதிமுகவில் இருப்பவர்கள் டிடிவி தினகரன் தலைமையில் இணைய வேண்டும்’’ என்றார்.

Tags : Jayalalithaa ,spokesperson ,Amma ,
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...