×

டேரா பாறை அணைத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை வேண்டும் திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தல்

உசிலம்பட்டி/பேரையூர், பிப்.27: டேராபாறை அணைத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என, திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் கிராமமக்கள் வலியுறுத்தினர். எழுமலை அருகே டி.கிருஷ்ணாபுரத்தில் திமுக ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். சேடபட்டி ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேசிய கிராமமக்கள், ‘‘கழிப்பறை, சாலை, சாக்கடை உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும். மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதி விவசாயிகளின் நீண்டகால கனவுத்திட்டமான டேராபாறை அணைத்திட்டத்தை துவங்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த மாவட்ட செயலாளர் மணிமாறன், ‘‘அனைத்து குறைகளையும் திமுக தலைவர் ஸ்டாலினிடம் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்போம். நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் உங்களுடன் சேர்ந்து உசிலம்பட்டி மற்றும் பேரையூரில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவோம்’’ என்றனர்.

கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் சங்கரபாண்டி, மாவட்ட வர்த்தக அணி சின்னப்பாண்டி, உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் சுதந்திரம், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் சுதந்திரம், டி.கிருஷ்ணாபுரம் ஊராட்சி செயலாளர் விஜயபாண்டி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியத்தில் அணைக்கரைப்பட்டி, பழையூர், சாப்டூர், வண்டப்புலி பகுதிகளில் திமுக ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். இங்கும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். இந்தக் கூட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் அணைக்கரைப்பட்டி ரவீந்திரன், சாப்டூர் குருநாதன், பழையூர் வைபாண்டியன், பசும்பொன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை