×

முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் தொடர்ந்து பரவும் காட்டுத் தீ

ஊட்டி, பிப். 26: முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் பல இடங்களில் தொடர்ந்து எரியும் காட்டுத் தீ கட்டுப்படுத்த வனத்துறையினர் திணறி வருகின்றனர். முதுமலை புலிகள்  காப்பகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
நீலகிரி  மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல பகுதியில்  மசினகுடி -  தெப்பகாடு சாலை, மாயார், பொக்காபுரம், ஆச்சக்கரை, சிங்காரா, மாவனல்லா,  மன்றாடியார் உள்ளிட்ட பல இடங்களில் இரு தினங்களுக்கு முன் காட்டு தீ ஏற்பட்டது. பலத்த காற்று  வீசியதால் தீ மளமளவென பரவியது. வனத்துறையினர், தீ தடுப்பு காவலர்கள்,  வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 300க்கும்  மேற்பட்டோர் இனைந்து கடும் போராட்டத்திற்கு பின்பு தீ  அணைக்கப்பட்டது. பல இடங்களில் ஏற்பட்ட காட்டு தீயில் பல ஏக்கர் பரப்பளவிலான  புல்வெளிகள், லேண்டானா போன்றவை எரிந்து நாசமானது. தீ  அணைக்கப்பட்ட போதும் பல இடங்களில் காய்ந்த மரக்கட்டைகள் எரிந்து புகைந்து  கொண்டே இருக்கிறது. அவற்றை அணைக்கும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு  வருகின்றனர். காட்டு தீ காரணமாக பாதுகாப்பு கருதி முதுமலை புலிகள்  காப்பகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வாகன சவாரியும்  நிறுத்தப்பட்டுள்ளது.  மன்றாடியார் பகுதியில் தீ  அணைக்கப்பட்ட நிலையில், பலத்த காற்று காரணமாக தொடர்ச்சியாக மேலும்  பல இடங்களில் தீ பரவி  வருகிறது. மூன்றாவது நாளாக நேற்று அபயரண்யம் பகுதியில் காட்டு தீ  ஏற்பட்டுள்ளது. இதனை அணைக்கும் பணிகளில் ஏராளமான வனத்துறையினர் ஈடுபட்டு  வருகின்றனர். இதேபோல் நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட   வேலிவியூ பகுதியில் நேற்று காட்டு தீ ஏற்பட்டது. இதில் சுமார் 10 ஏக்கர்   பரப்பளவிலான புல்வெளிகள் எரிந்து நாசமானது. முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல பகுதியில் காட்டு தீயால்  ஏற்பட்ட சேதம், வன விலங்குகள் ஏதேனும் உயிரிழந்துள்ளதா என வனத்துறையினர்  ஆய்வு நடத்தி வருகின்றனர். வனப்பகுதியில் வறட்சியின் காரணமாக தொடரும் காட்டு தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

Tags : Mudumalai Tigers ,
× RELATED முதுமலை புலிகள் காப்பகத்தில்...