×

மண்ணச்சநல்லூர் அருகே அய்யன்வாய்க்கால் குறுக்கே ஜூலை மாதத்திற்குள் தடுப்பணை அமைதிப் பேச்சு கூட்டத்தில் அதிகாரி உறுதி

மண்ணச்சநல்லூர், பிப்.26:  மண்ணச்சநல்லூர் அருகே அய்யன்வாய்க்காலில் வரும் ஜூலை மாதத்திற்குள் தடுப்பணை கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைதிப்பேச்சுவார்த்தையில் பொதுப்பணித்துறை அதிகாரி உறுதியளித்தார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ளது மாதவப்பெருமாள் கோயில் கிராமம்.இங்கு ஓடும் அய்யன் வாய்க்காலில் நொச்சியம் இரட்டைமண்டபம் அருகே ஒரு தடுப்பணை கட்டினால் 1,860 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். நொச்சியம், குமரக்குடி, பிச்சாண்டார்கோயில் ஊர்களின் குடிநீர் தேவையும் பூர்த்தியாகும். கடந்த பத்து வருடங்களாக இப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கை வைத்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. இதனால் விரக்தியடைந்த விவசாயிகள் நொச்சியம் கடைவீதியில் சாலைமறியல் செய்யப்போவதாக அறிவித்தனர். இதனையறிந்த மண்ணச்சநல்லூர் தாசில்தார் ராஜேஸ்கண்ணா, விவசாயிகள்சங்க பிரதிநிதிகளை அழைத்து தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தினார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வரும் நிதியாண்டில் ஜூலை மாதத்திற்குள் தடுப்பணை கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை உதவிசெயற்பொறியாளரும், பாசன ஆய்வாளரும் உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

கூட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சுப்ரமணியன், ஒன்றியத் தலைவர் கருணாநிதி, ஒன்றியச் செயலாளர் முருகேசன், முன்னாள் மத்தியக்குழு உறுப்பினர் செல்லம்மாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் சம்மந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள், விவசாய பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக நடந்த மற்றொரு அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் பூனாம்பாளையம் பஞ்சாயத்தை சேர்ந்த வடக்கிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளிக்கு சிதிலமடைந்த பள்ளிக்கட்டிட மேற்கூரைகளை உடனடியாக சீரமைத்து  விரைவில் கான்கிரீட் அமைத்து தரப்படும் என வடக்கிபட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் சம்மந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர்.

Tags : banquet conference meeting ,Mannachanallur ,Ayyanavankar ,
× RELATED 3 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்