×

மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை அவசர நோயாளிகள் அவதி

மண்ணச்சநல்லூர், பிப்.26:  மண்ணச்சநல்லூர்  ஒன்றியத்திற்கு  உட்பட்ட அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனைக்கு  பூனாம்பாளையம், திருவெள்ளரை, அய்யம்பாளையம், திருப்பைஞ்சீலி, ராசாம்பாளையம், நொச்சியம், அத்தானி , நெற்குப்பை, தத்தமங்கலம்   உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக தினமும் வந்து செல்கின்றனர். தாய் சேய் நலம், பொது மருத்துவம், மலேரியா, தொழுநோய், பெண்களுக்கான மார்பக பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்பட பல்வேறு சிகிச்சைகளுக்காக வரும் பொதுமக்கள் மற்றும் கர்பிணிகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த அரசு மருத்துவமனையில்  போதிய டாக்டர்கள் இல்லாததால் பொதுமக்கள் நீண்ட நேரம் சிகிச்சைக்காக காத்திருக்க வேண்டிய நிலைஏற்பட்டுள்ளது. இதனால் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மண்ணச்சநல்லூர்  ஒன்றியத்தில் உள்ள ஓமாந்தூர், எதுமலை, ககரியமாணிக்கம், சுகாதார நிலையத்தின் தலைமை அரசு மருத்துவமனையான  மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனை 45 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த அரசு மருத்துவமனைக்கு முழுமையாக  சுற்றுச்சுவர் அமைக்கப்படாததால் ஆடு, மாடுகள், நாய்கள் போன்றவை சுகாதார நிலையத்திற்குள்ளேயே சுற்றி திரிகிறது. கர்ப்பிணிகள், குழந்தைகள்மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் அருகிலேயே செவிலியர் பயிற்சி கட்டிடம், மற்றும் மருத்துவர், ஊழியர்கள் தங்கும் குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் செயல்பாடின்றி பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுகிறது. அங்கு பாம்புகள் நடமாட்டம் உள்ளது. ஆகவே உடனடியாக கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும். காவலர்கள் நியமிக்க வேண்டும். சுற்றுச்சுவர் அமைத்து போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பழைய கட்டிடங்களை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Emergency patients ,Mannachanallur Government Hospital ,doctors ,
× RELATED போலி டாக்டர்களை அனுமதிப்பது...