×

ஓமலூர் பகுதிகளில் அனுமதியின்றி பேனர் வைத்தால் நடவடிக்கை

ஓமலூர், பிப்.26: உள்ளாட்சி அமைப்புகளுக்குட்பட்ட பகுதிகளில், உரிய அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகை, டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பதாகைகள், மக்கள், பாதசாரிகள், பயணிகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக அமைவதால், அவற்றை முறைப்படுத்த, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் டிஜிட்டல் அச்சகங்களின் உரிமையாளர்களுடன், ஆலோசனை கூட்டம் நடந்தது. ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் வட்டார அலுவலகத்திலும் மற்றும் பேரூராட்சி அமைப்புகளிலும் ஆலோசனை கூட்டங்கள் நடந்தது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் பேசுகையில், ‘சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால உத்தரவு நகல், அனைத்து கட்சியினர், டிஜிட்டல் பிரின்டிங் உரிமையாளர் சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில், மறு உத்தரவு வரும் வரை, பேனர்கள் நிறுவ அனுமதி வழங்கக்கூடாது. சாலையோரம், நடைபாதை, 10 அடிக்கு அகலம் குறைந்த சாலைகளில் நிறுவ அனுமதி வழங்கக்கூடாது என்பன உள்ளிட்ட விதிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதனை மீறி அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்டால், போலீஸ் வழக்குப்பதிந்து, ஓராண்டு சிறை தண்டனை, ₹5 ஆயிரம்  வரை அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்த, அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,’ என்றனர்.

Tags : areas ,Omalur ,
× RELATED 17 வயது சிறுமியின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வாலிபர்