×

சாலைப்புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு கிலோ கருப்பு எள் ரூ.158க்கு ஏலம்

க.பரமத்தி, பிப். 26: சாலைப்புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு கிலோ முதல் ரக கருப்பு எள் ரூ.158க்கு ஏலம் போனது. இதனால் மானாவாரி நிலங்களில் எள் விதைத்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். க.பரமத்தி ஒன்றியத்தில் பவித்திரம், புன்னம், காருடையாம்பாளையம், நெடுங்கூர், க.பரமத்தி, குப்பம், முன்னூர், அத்திப்பாளையம் ஆகிய 30 ஊராட்சிகள் உள்ளன. இதில் பெரும்பாலும் மானாவாரி நிலங்களில் பருவ மழை காலங்களில் பல விதமான பணப்பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு அறுவடை செய்து பிழைத்து வருகின்றனர். இந்நிலையில் ஒன்றிய பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக போதிய பருவ மழை இல்லை. இதனால் நீர்நிலைகள் வறண்டு விட்டதால் கிணற்று பாசனம் முற்றிலும் பொய்த்து விட்டது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக வானம் பார்த்த பூமியாக மாறி விட்டது.

மேலும் விவசாயமும் கேள்விக்குறியானது மட்டுமின்றி அதனைச் சார்ந்த விவசாய தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு வந்தனர். ஒரு சில விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்வாதாரங்களை தேடி வெளியூர்களுக்கு சென்று விட்டனர். இந்நிலையில் கடந்த மாதங்களில் பெய்த மழையை நம்பி நீண்ட நாட்களாக விவசாயம் செய்யாத விவசாயிகள் உழவு பணிகளை தொடங்கி தரிசாக உள்ள மானாவரி நிலங்களில் எள், கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களை விதைத்தனர். ஒன்றியம் முழுவதும் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் 3 மாத காலத்தில் அறுவடை செய்யக் கூடிய எண்ணெய் வித்து பயிரான எள் விதைத்தனர். தற்போது அறுவடை செய்து அவற்றை சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்திற்கு கொண்டு வந்தனர். சுமார் 24 மூட்டைகளில் ஆயிரத்து 609 கிலோ  ஏலம் விடப்பட்டது.

இந்த வாரம் நடந்த ஏலத்தில் கருப்பு எள் சராசரி விலையாக ஒரு கிலோ ரூ.124க்கும், அதிக பட்சமாக ரூ.158க்கும் ஏலம் போனது. இதே போல சிகப்பு எள்ளுக்காக நடந்த ஏலத்தில் சராசரி விலையாக ஒரு கிலோ ரூ.110க்கும், அதிக பட்சமாக ரூ.137க்கும் ஏலம் போனது. இதனால் எள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : roadshop regulator ,
× RELATED மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்