×

போச்சம்பள்ளி - தர்மபுரி இடையே ஆமை வேகத்தில் செல்லும் விரைவு பஸ்கள்

போச்சம்பள்ளி, பிப்.26:  போச்சம்பள்ளிதர்மபுரி இடையே இயக்கப்படும் விரைவு பஸ்களில் உரிய கட்டணம் வசூலித்தாலும் வழிநெடுகிலும் உள்ள ஊர்களில் நிறுத்தி ஆமை வேகத்தில் இயக்கப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போச்சம்பள்ளியிலிருந்து தர்மபுரிக்கு தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், போச்சம்பள்ளி வழியாக அரசு விரைவு பஸ்களும் சென்று வருகின்றன. சாதாரண பஸ்களில் கட்டணம் குறைவு. அதேவேளையில் இந்த பஸ்கள் பல கிராமங்களிலும் நின்று பயணிகளை ஏற்றிஇறக்கிச் செல்லும். போச்சம்பள்ளியில் இருந்து தர்மபுரிக்கு செல்ல சுமார் 1 மணி நேரம் ஆகும். ஆனால், விரைவு பஸ்கள் வழியில் எங்கும் நிற்பதில்லை. இந்த பஸ்களில் போச்சம்பள்ளியிலிருந்து தர்மபுரி செல்ல சுமார் அரை மணி நேரம் பிடிக்கும். இடையில் திப்பம்பட்டியில் மட்டும் தான் நிறுத்தப்படும். இதனை பயன்படுத்திக்கொண்டு கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், கட்டணம் கூடுதலாக இருந்தாலும், விரைவான பயணத்திற்காக பயணிகள் கால் கடுக்க காத்திருந்து விரைவு பஸ்களையே நாடுகின்றனர். அப்போது, அவர்களிடம் போச்சம்பள்ளிக்கு அடுத்தப்படியாக திப்பம்பட்டியில் மட்டும் தான் நிற்கும் என கூறுகின்றனர். அதனைத் தொடர்ந்து இடையில் எங்கும் நிற்காமல் தர்மபுரிக்கு பஸ் செல்வதாக தெரிவிக்கின்றனர். இதனை நம்பி பஸ்சில் ஏறினால் வழக்கம்போல் கூடுதல் கட்டணம் வசூலித்துக்கொண்டு வழிநெடுகிலும் உள்ள புலியூர், மஞ்சமேடு, இருமத்தூர், திப்பம்பட்டி, அரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கிறார்கள்.

இதுகுறித்து நடத்துனர்களிடம் கேட்டால், பயணிகள் கால் கடுக்க நிற்பதை பார்க்க பரிதாபமாக உள்ளது. கொஞ்சம் அனுசரித்து செல்லுமாறு கூறி சமாளித்து விடுகிறார்கள். ஒரு சில நடத்துனர்கள், ஒருபடி மேலே சென்று மிரட்டும் தொனியில் பேசுகின்றனர். இஷ்டம் இருந்தால் இந்த பஸ்சில் வா. இல்லையெனில், கீழே இறங்கி நடையை கட்டு என கூறுகின்றனர். இதுதொடர்பாக பஸ் பயணிகள் மற்றும் நடத்துனர்களிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது. கூடுதல் கட்டணம் செலுத்தி விரைவில் செல்லலாம் என நினைத்து விரைவு பஸ்சில் பயணித்தால், டவுன் பஸ்சை விட மோசமான பயண அனுபவத்தை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டு விரைவு பஸ்களை விரைந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாகும்.

Tags : Dharmapuri ,Pochampally ,
× RELATED கற்கள் கடத்த முயன்ற டிராக்டர் பறிமுதல்