×

24 ஆண்டுகளுக்கு பின் கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் பர்ணேற்று திருவிழா மார்ச் 18ல் நடக்கிறது

நித்திரவிளை, பிப். 26:  கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயிலில் (மூலக் கோயிலில்) பர்ணேற்று திருவிழா மார்ச் 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 18ம் தேதி வரை நடக்கிறது. கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோயிலில் 12 வருடத்திற்கு ஒரு முறை பர்ணேற்று திருவிழா நடைபெறும். கடந்த 1994ம் ஆண்டு இந்த விழா நடத்தப்பட்டது. பின்னர் சில காரணங்களால் அடுத்த 12ம் ஆண்டில் திருவிழா நடைபெறவில்லை, 24 வருடங்கள் கழித்து மீண்டும் இவ்வருடம் திருவிழா நடைபெறுகிறது. தேவர்களையும், ரிஷிகளையும்  கொடுமைப்படுத்திய மகிஷாசுரன் என்ற அரக்கனை பத்திரகாளி அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சியே பர்ணேற்று என்பதாகும்.  இதில் முதலில் அரக்கனும், அம்மனும் பரண் மேல் ஏறி எதிர் எதிர் திசையில் அமர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபடுவர்.  இருவரும் மாறி மாறி அம்புகள் எய்தும் போர் செய்வர். பின் நிலத்தில் போர் செய்வர். இதில் பத்ரகாளி அம்மன் அரக்கனை கொன்று விடுவார். தொடர்ந்து அம்மன் சந்தோஷத்தில் நடனம் ஆடுவார். பரண் மேல் ஏறி நின்று போர் செய்வதால் இதை பர்ணேற்று திருவிழா என்றும், வெற்றி களிப்புடன் இருக்கும் அம்மனுக்கு அதிகமான உணவு ஊட்டுவதால் காளியூட்டு திருவிழா என்றும் பக்தர்கள் குறிப்பிடுவார்கள். இத்திருவிழா தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி கோயில் அலுவலகத்தில் நடந்தது. இதில், கோயில் நிர்வாக செயலாளர் மோகன் குமார், தலைவர் சதாசிவன் நாயர், துணை செயலாளர் பிஜூ குமார், கமிட்டி உறுப்பினர்கள் விலோஜனன் நாயர், கிருஷ்ணன் நாயர், விஜயகுமார், சந்திரசேகரன் நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் கூறுகையில், கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் மூலக் கோயிலில் பர்ணேற்று திருவிழா மார்ச் 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 18ம் தேதி திங்கட்கிழமை பர்ணேற்று நடக்கிறது.

பொதுவாக பர்ணேற்று திருவிழா 12 வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும். சில காரணங்களால் கடந்த முறை நடத்தப்படவில்லை. 24 ஆண்டுகள் கழித்து தற்போது நடத்தப்படுகிறது. கோயிலின் நான்கு திசைகளிலும் உள்ள பொதுமக்கள் தான் இந்த திருவிழாவை நடத்துகின்றனர். ஒவ்வொரு திசையிலும் உள்ள பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகளை போட்டி போட்டு நடத்துகின்றனர்.  குறிப்பாக இந்து மதத்தினர் காட்டும் அக்கறையை விட கிறிஸ்தவர்கள் தான் அதிக அக்கறை கொண்டு  இத்திரு விழாவை நடத்துகின்றனர். இதனால் இவ்விழா ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு நடக்க உள்ளது. விழாவில் கேரள அரசு உயர் அதிகாரிகள், கேரள, தமிழக மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், நடிகர்கள் கலந்து கொள்கின்றனர். திருவிழா நாட்களில் கோயில் வளாகத்தில் மருத்துவம், குடிநீர், ஓய்வு அறைகள், வாகன பார்க்கிங், உணவு என பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன. மேலும் கேரள மற்றும் தமிழக அரசின் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக என தெரிவித்தனர்.

Tags : festival ,Birnittu ,Krankodu Bhadrakaliyamman ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...