×

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அகலம் குறைந்த அணுகு சாலைகள் நிலம் வழங்க முன்வந்தும் ஏற்காத அரசுத்துறைகள்

மார்த்தாண்டம், பிப். 26: மார்த்தாண்டத்தில் நிலவிவரும் கடும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 220 கோடி செலவில் தென்னிந்தியாவிலேயே மிகவும் நீளமான, தமிழகத்திலேயே மிகவும் பெரிய இரும்பு பாலமாக இது உள்ளது. குழித்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து மார்த்தாண்டம் பம்மம் வரை சுமார் 2.5 கி.மீ தூரத்திற்கு இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தில் இருந்து மார்த்தாண்டம் மார்க்கெட் சாலைக்கு காந்தி மைதானம் பகுதியில் சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ‘ஒய்’ வடிவிலான இந்த 2 தளங்களும் பின்னர் ஒன்றாக சேர்ந்து மார்க்கெட் சாலையில் முடிகின்றன. தற்போது மேம்பாலத்தில் வெள்ளோட்ட முறையில் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி சாலைகளை சீரமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. நெடுஞ்சாலையில் இரு பக்கங்களிலும் சாலை தார் அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. அதுபோல கீழ்ப்பகுதி சாலையின் இருபக்கங்களிலும் உள்ள மேடான நடைபாதைகளில் அலங்கார தரைக்கற்கள் பதிக்கும் பணியும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அகலம் மிகக்குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுவாக ஒரு பக்க சாலை 4 முதல் 4.5 மீட்டர் அகலம் இருக்க வேண்டும். ஆனால் இங்கு போடப்பட்டுள்ள சாலை சில இடங்களில் அகலமாகவும், சில இடங்களில் திடீரென குறுகியும் ஒழுங்கற்ற வகையில் காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் 3 மீட்டர் அகலமும், சில இடங்களில் 3.5 மீட்டர் அகலமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் ஆக்ரமிப்புகளை அகற்றி, போதுமான இடத்தை கையகப்படுத்திவிட்டு சீராக சாலை அமைக்கப்படவில்லை. இதனால் வாகனங்கள் செல்லும்போது விபத்துக்குள் ஏற்படும் அபாயம் உள்ளது. அணுகுசாலைகள் 4 முதல் 4.5 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக சாலையோரம் குறியீடும் செய்யப்பட்டது. அதுபோல சாலை குறுகலாக வரும் பகுதியில், உரிய இழப்பீடு வழங்கினால் தங்கள் நிலத்தை வழங்கவும் பலர் தயாராக உள்ளனர். இதற்காக அவர்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளருக்கு எழுத்துபூர்வமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பே உறுதி அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக இருக்கும் மிகவும் குறுகலான இடத்தில் தற்போது அணுகு சாலைகளை அமைத்து வருகின்றனர்.

இதனால் சில இடங்களில் அணுகு சாலைகள் 2.5 மீட்டராக சுருங்கி விடுகிறது. குறிப்பாக பம்மத்தில் பாலம் தொடங்கும் பகுதி மற்றும் மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் அணுகு சாலைகளின் அகலம் மிகவும் குறைவாக உள்ளது. இதில் சில இடங்களில் ஓடைகளின் மீது காங்கிரீட் சிலாப் அமைத்து சாலை அமைக்கப்படுகிறது. இதனால் கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்லும்போது சிலாப் உடைந்து விபத்தை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. எனவே முறையான இழப்பீடுகளை வழங்கி போதிய நிலத்தை கையகப்படுத்தி 4 முதல் 4.5 மீட்டர் அகலத்தில் அணுகு சாலைளை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அமைச்சரிடம் முறையீடு

இந்த நிலையில், கடந்த வாரம் மேம்பாலம் மற்றும் கீழ்ப்பகுதியில் நடந்துவரும் சாலைப்பணிகளை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் சாலை அமைப்பதில் குளறுபடிகள் ஏற்பட்டு வருவது குறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக் கொண்டார். ேமலும் வெட்டுவெந்நியில், தொடர் விபத்துக்கள் நடந்து வருவதால் பாலம் தொடங்கும் இடத்தில் பஸ் நிறுத்தம் வேண்டாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இதனால் சாலையின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்ட புதிய நிழலக கூரைகள் அகற்றப்பட்டன.

குறுகலான பகுதியில் சிக்கிக்கொண்ட கிட்டாச்சி

கடந்த சில தினங்களுக்கு முன் பம்மத்தில் அணுகுசாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட கிட்டாச்சி இயந்திரம் ஒன்று குறுகலான பகுதியில் சிக்கிக் கொண்டது. அப்பகுதியில் மின்பெட்டி உள்ளதால் கிட்டாச்சி இயந்திரத்தை நகர்த்த முடியவில்லை. இதையடுத்து அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, கடின முயற்சிக்கு பின்னர் கிட்டாச்சி இயந்திரம் மீட்கப்பட்டது. இதேப்போன்று குலசேகரம், அருமனை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ரப்பர் மரத்தடிகள் ஏற்றிவரும் கட்டன்சர் லாரிகள் அதிகளவில் மார்த்தாண்டம் வடக்குதெரு சாலை வழியாக பம்மம் நோக்கி வரும். பம்மத்தில் அகலம் குறைந்த அணுகு சாலைகளால் இந்த லாரிகள் மார்த்தாண்டத்திற்குள் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளை மேம்பாலத்தில் செல்ல வேண்டுமானால் சுமார் 2 கி.மீ., குழித்துறை சென்று திரும்பி வர வேண்டும். இதேப்போன்று மார்த்தாண்டம் காளைசந்தை பஸ் நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகள் மேம்பாலத்தின் கீழ் பகுதியாக பம்மம் வந்து அங்கிருந்து அணுகுசாலை வழியாகத்தான் தேசிய நெடுஞ்சாலைக்கு வரவேண்டும். இதனால் குறுகிய சாலையில் வாகன போக்குவரத்து பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் நிலை உள்ளது.

Tags : Marthandam ,roads ,government ,government departments ,
× RELATED மார்த்தாண்டத்தில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு