×

அதிமுக ஆட்சியில் குப்பைக்கு போன அறிக்கை தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை விரும்பும் வகையில் நிறைவேற்றப்படும்

தூத்துக்குடி, பிப். 26: தேவேந்திரகுல வேளாளர் மக்கள் கோரிக்கை நிறைவேற திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட கமிஷன் அறிக்கை அதிமுக ஆட்சியில் குப்பைக்கு போய் விட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் தேவேந்திர குல வேளாளர் மக்களின் விருப்பம் நிறைவேற்றப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டையில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரப் போகிறது. இடைத்தேர்தல் மட்டுமல்ல நாடாளுமன்ற தேர்தலுடன் பொதுத்தேர்தலும் வர வேண்டும். அப்போது தான் இந்த ஆட்சிக்கு விமோசனம் கிடைக்கும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். நாம் சந்திக்கும் தேர்தல் நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும், இடைத்தேர்தலாக இருந்தாலும் வெற்றிக்கு காரணம் வாக்குச்சாவடி முகவர்கள் என்பதை மறுக்க முடியாது. கருணாநிதி ஒன்றரை ஆண்டு காலம் வயது முதிர்வு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்தார். அவ்வாறு ஓய்வில் இருக்கும் போது கட்சிப் பணியில் தொய்வு இருக்கக் கூடாது என்பதற்காக திமுகவின் முன்னணி தலைவர்கள் துரைமுருகன், ஐ பெரியசாமி போன்றவர்கள் ஒன்று சேர்ந்து பொதுக்குழுவைக் கூட்டி செயல் தலைவர் என்ற பொறுப்பை உருவாக்கி எனக்கு வழங்கினர்.

அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு கடமையாற்றத் தொடங்கினேன். அப்போது ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வுக் கூட்டம் நடத்தினேன். இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை அழைக்க முடிவு செய்து தலைவரை சந்திக்கும் வாய்ப்பை உருவாக்கினேன். அவர்களிடம் நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள். கட்சித் தலைமை இருக்கிறது. என்றென்றும் உங்களுக்கு துணை நிற்கும் என்ற உறுதியை தந்து அனுப்பினேன். அதே உறுதியை பூத் முகவர்களுக்கும் கூறுகிறேன். கட்சி முன்னணியினர், நிர்வாகிகளுக்கு செய்வது போல் திமுக ஆட்சிக்கு வந்ததும் அதை விட அதிகமாக வாக்குச்சாவடி முகவர்களுக்கு செய்வோம். நாம் பெறும் வெற்றி, சிறப்பு, பெருமை அத்தனையும் தனிப்பட்ட உழைப்பு அல்ல. வாக்குச்சாவடி முகவர்களின் உழைப்பு தான். நான் கொல்கத்தா சென்ற போது பல மாநில முதல்வர்களை சந்தித்தேன். அப்போது ஊராட்சி சபை கூட்டத்தை எப்படி கூட்டினீர்கள்? எப்படி சாத்தியம்? என்றனர். திமுக கட்டுக்கோப்பான இயக்கம் என்பதால் கூட்டத்தை நடத்துகிறோம் என்றேன். ஓட்டப்பிடாரம் தொகுதியில் 256 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒரு வாக்குச்சாவடிக்கு 20 முகவர்களை நியமித்துள்ளோம். ஒவ்வொரு முகவரும் 20 ஓட்டுக்கள் போட வைத்தாலே நாம் வெற்றி  பெறுவோம்.

தேவேந்திர குல வேளாளர் மக்கள் கருணாநிதி முதல்வராக இருந்த போது தங்களுக்கு உரிய மரியாதையும், மதிப்பும் தர வேண்டும் என 2011ல் கோரிக்கை வைத்தனர். இதற்காக கருணாநிதி, நீதியரசர் ஜனார்த்தனன் தலைமையில் குழு அமைத்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார். அந்த அறிக்கையும் திமுக ஆட்சியில் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் இதற்காக ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அதற்குள் தேர்தல் வந்து திமுக ஆட்சி போய் விட்டது. தற்போதும் அந்த அறிக்கை கோட்டையில் முதல்வர் அலுவலகத்தில் உள்ளது.
அந்த அறிக்கையை குப்பையில் போட்டு விட்டனர். அந்த கமிஷன் அறிக்கை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தேவேந்திர குல வேளாளர் விரும்பும் வகையில் நிறைவேற்றப்படும் என உறுதி கூறுகிறேன். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வேண்டும் என்றே திட்டமிட்டு குறி வைத்து பயிற்சி பெற்ற போலீசால் அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் பல கோடி லஞ்சம் பெற்றுக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் இதை செய்துள்ளன. தற்போது சுப்ரீம் கோர்ட் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்துள்ளது. எனினும், எந்த நேரத்திலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மீண்டும் வாய்ப்புள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை கொள்கை முடிவாக எடுக்க வேண்டும் என பலமுறை நான் சட்டமன்றத்தில் பேசினேன்.

இதை அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவெடுத்து பின்னர் சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று நான் மட்டுமல்ல அனைத்து தலைவர்களும் அதை கூறியுள்ளனர். அந்தக் கோரிக்கையும் தற்போது குப்பையில் போடப்பட்டுள்ளது.  திமுக ஆட்சிக்கு வந்தால் தான் இது நிறைவேறும்.  இவ்வாறு அவர் பேசினார். ஸ்டாலின் நெகிழ்ச்சி
கூட்டத்தில் ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும் போது, ‘‘தலைவர் கலைஞர் வயது முதிர்வால் ஓய்வெடுத்தபோது, கட்சிப் பணியில் சுணக்கம் இருக்கக் கூடாது என்பதற்காக எனக்கு கட்சியின் முன்னணி தலைவர்கள் செயல் தலைவர் பொறுப்பை வழங்கினர். ஆனால் அவருக்கு ஈடாக யாராவது பணியாற்ற முடியுமா? அதற்கு  இனி ஒருவர் பிறந்தும் கூட வர முடியாது என ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

விசாரணை கமிஷன் கண்துடைப்பு நாடகம்

ஜெயலலிதா மரணத்தை பற்றி விசாரிக்க ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அமைத்துள்ளனர். இந்த விசாரணை கமிஷன் கண்துடைப்பு நாடகம். ஜெயலலிதா அதிமுகவைச் சேர்ந்தவராக இருந்தாலும், தமிழக முதல்வராக இருந்தவர். அவரது மரணம் பற்றிய உண்மை, பொதுமக்களுக்கு தெரிய வேண்டும் என அதிமுகவினரே நினைக்கின்றனர். எனவே திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஜெ. மரணம் குறுித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றார்.

Tags : regime ,AIADMK ,Devendra Gula Vellalar ,
× RELATED அதிமுக ஆட்சியிலும் கல்வராயன் மலையில்...