×

தென்காசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பூங்காவை உரக்கிடங்காக மாற்ற எதிர்ப்பு

தென்காசி, பிப்.26: தென்காசி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பூங்காக்களில் குப்பை கழிவுகளை கொட்டுவதற்கும், உரக்கிடங்கு அமைப்பதற்கும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. வீட்டு வசதி வாரியம் சார்பில் குடியிருப்பு அமைக்கப்பட்டபோது மொத்தம் 8 இடங்களில் பூங்காக்கள் அமைத்திருந்தனர். அதன்பிறகு பராமரிப்பு காரணங்களுக்காக நகராட்சி நிர்வாகம் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் பூங்காவை பராமரித்து அதில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு பதிலாக அதனை நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டும் குப்பை கிடங்காவும்,  நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடமாகவும் மாற்ற முயற்சித்தது. ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் ஒரு பூங்காவில் இதே போன்ற முயற்சியை பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக கைவிட்ட நிலையில் நேற்று மீண்டும் வேறு ஒரு பூங்காவில் உரக்கிடங்கு அமைக்க முயன்றனர்.

இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ரேஷன்கார்டு ஒப்படைக்கும் போராட்டம் மற்றும் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நகராட்சி அதிகாரிகள் கலைந்து சென்றனர். இருந்தபோதும் குடியிருப்பு பகுதியில் குப்பை கிடங்கு அமைக்கும் முயற்சியை நிரந்தரமாக கைவிடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பைக்கிலிருந்து தவறி விழுந்த முன்னாள் ஜி.ஹெச். ஊழியர் சாவு