புதுவாழ்வு திட்ட பணியாளர்கள் பொதுக்குழு கூட்டம் வேலை வழங்காமல் அலைக்கழிப்பதாக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

* 20 மாதமாக வேலை இல்லாமல் திண்டாட்டம் * முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

மதுராந்தகம், பிப்.26: தமிழ்நாடு புதுவாழ்வு திட்ட பணியாளர்கள் பொதுக்குழு கூட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துபாக்கத்தில் நேற்று நடந்தது. அமைப்பின் மாநில தலைவர் தமிழரசு தலைமை வகித்தார். நிர்வாகி இன்பநாதன் முன்னிலை வகித்தார். சுகுமார் வரவேற்றார். முக்கிய நிர்வாகிகள் கூறுகையில், தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் கடந்த 2005ம் ஆண்டு முதல் புதுவாழ்வு திட்டம் 26 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.

இதில், 1500 பேர் வேலை செய்தனர். இவர்கள் கிராம மக்களின் வறுமையை குறைத்தல், மாற்றுத் திறனாளிகள், நலிவுற்றோர், இளைஞர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் ஆகியோரின் முன்னேற்றத்துக்கும், மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளை செய்து வந்தனர்.

இந்த வேளையில், கடந்த 2017ம் ஆண்டு புதுவாழ்வு திட்டம் முடிந்து விட்டதாக அரசு அறிவித்து, பணியாளர்களுக்கு வேலை இல்லை என தெரிவித்தது. இதனால், தற்போது வரை நாங்கள், கடந்த 20 மாதங்களாக வேலையின்றி இருக்கிறோம். மாற்று பணி கொடுக்காமல் அலைக்கழிக்கப்படுகிறோம். எனவே தமிழக அரசு உடனடியாக எங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்றனர். தொடர்ந்து, புதுவாழ்வு திட்டத்தில் பணியாற்றிய அனைத்து பணியாளர்களையும், அரசுத் துறையில் காலியாக உள்ள வேலையில் அமர்த்தி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சட்டப்படி வழங்க வேண்டிய சரண்டர் பணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: