×

செம்பாக்கம் நகராட்சியில் அரைகுறை கல்வெட்டு பணியால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்: அதிகாரிகள் அலட்சியம்

தாம்பரம்: தாம்பரம் அடுத்துள்ள செம்பாக்கம் நகராட்சில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிக்கான நகராட்சி அலுவலகம் காமராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் கலைவாணி தெருவில் அமைத்துள்ளது. இங்கு, பொதுமக்கள் பல்வேறு பணிகள், வரி செலுத்துதல் உள்ளிட்ட தேவைகளுக்கு வந்து செல்கின்றனர். இந்த கலைவாணி தெரு, வேளச்சேரி -  தாம்பரம் பிரதான சாலையுடன் சந்திக்கும் இடத்தில், மழைநீர் கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. ஆனால், பணிகள் முழுமையாக நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் நகராட்சி அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் அவ்வழியே செல்ல முடியாமல், அருகில் உள்ள பஜனை கோயில் தெரு வழியாக செல்லும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்த செய்தி, கடந்த நவம்பர் மாதம் 13ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது.

இதையடுத்து கிடப்பில் போடப்பட்ட கல்வெட்டு பணி மீண்டும் தொடங்கி முடிக்கப்பட்டது. ஆனால், அந்த கல்வெட்டின் ஒருபகுதியை மழைநீர் கால்வாயுடன் இணைக்கும் பணி முழுமையாக நடைபெறாமல் அரைகுறையாக விடப்பட்டுள்ளது. இதனால், இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், வாகனஓட்டிகள், கால்நடைகள் அந்த கால்வாய் பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள சாலையில் மழைநீர் கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைக்கும் பணிகள், தொடங்கிய நாளில் இருந்து முறையாக நடைபெற்று இருந்தால், எப்போதோ முடிந்திருக்கும். ஆனால், அதிகாரிகள் முறையாக பணியை மேற்கொள்ளவில்லை. இதனால் நகராட்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

இதுபற்றி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானதும், அவசர அவசரமாக கல்வெட்டு பணி மீண்டும் தொடங்கியது. ஆனால், அதையும் முழுமையாக மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளனர். மழைநீர் கால்வாயுடன் கல்வெட்டை இணைக்காததால் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இங்கு சுமார் 5 அடி அகலம், 8 அடி ஆழம் வரை பள்ளமாக உள்ளதால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : municipality ,Zimbabwe ,
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை