×

ஊரப்பாக்கம் அருகே ஐயஞ்சேரியில் புதிதாக திறந்த டாஸ்மாக் கடையை உடனே மூட பொதுமக்கள் வலியுறுத்தல்: நடவடிக்கை இல்லாவிட்டால் மறியல் நடக்கும் என எச்சரிக்கை

காஞ்சிபுரம், பிப் 26: ஊரப்பாக்கம் அருகே உள்ள ஐயஞ்சேரியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனே மூட வலியுறுத்தி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கம் ஊராட்சியில், ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், ஐயஞ்சேரி உள்பட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில், ஊரப்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலமாக கொலை, வழிப்பறி, கொள்ளை, திருட்டு, தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு, கஞ்சா விற்பனை உள்பட பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. சிமென்ட் கடை அமைப்பதாக கூறி, ஐயஞ்சேரி - விபிகே நகர் பிரதான சாலை மதுரை மீனாட்சி புரத்தில் டாஸ்மாக் கடை (4371), கடந்த 15ம் தேதி திறந்துள்ளனர்.

இதன் அருகில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கோயில்கள், தேவாலயங்கள் உள்ளன. இவை அனைத்துக்கும் செல்ல பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். ஏற்கனவே இப்பகுதியில் தலை துண்டித்து ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்குளிடம் சமூக விரோதிகள்  சில்மிஷம் செய்கின்றனர். தெரு மின் விளக்கு இல்லாததால், உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் தினமும் அச்சத்துடன் சென்று வருகிறோம். இந்நிலையில், சிமென்ட் கடை அமைப்பதாக கூறி, பெயர் பலகை மற்றும் கடை எண் இல்லாமல் டாஸ்மாக் கடை திறந்துள்ளதால், சமூக விரோத செயல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளன.

சம்பந்தப்பட்ட கடையை மூட வலியுறுத்தி தொடர்ந்து 2 நாட்கள் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து போலீசில் முறையிட்டும் பயனல்லை. எனவே பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற மாவட்ட கலெக்டர் மற்றும் டாஸ்மாக் பொது மேலாளர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், முறையாக மேற்கண்ட டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால், ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் பெரிய அளவில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.

Tags : Citizens ,shop ,Tasmag ,Urumpappakkam ,Ayanjeri ,
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...