ஓட்டப்பிடாரம், பிப். 22: எப்போதும்வென்றான் அருகே அதிகாரிகள் அலட்சியத்தால் கிராமசாலை உருக்குலைந்துள்ளது. இதனிடையே நபார்டு வங்கி உதவியில் மேற்கொள்ளப்படும் கிராமச்சாலையை தரத்துடன் அமைக்க வேண்டும் என வெ.தளவாய்புரம் மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஓட்டபிடாரம் தாலுகா, எப்போதும்வென்றானில் இருந்து எட்டையபுரம் தாலுகா கண்ணக்கட்டை பஞ்சாயத்து வெ.தளவாய்புரத்திற்கு செல்லும் 2.5 கி.மீ சாலை அதிகாரிகளின் அலட்சியத்தாலும், முறையான பராமரிப்பின்றியும் முற்றிலும் உருக்குலைந்தது. இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனிடையே நபார்ட் வங்கி திட்டத்தின் கீழ் ரூ.57 லட்சத்தில் சீர்செய்யும் பணி கடந்த 8 மாதங்களுக்கு முன் துவங்கியது. இருப்பினும் தார் விரிக்காத நிலையில் அந்த ரோடானது தற்போது சிதிலமடைந்து விட்டது.
இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் சொல்லமுடியாதபடி அப்படி சென்றால் பலரும் சறுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர். கூடுதல் சரள்மண் போடப்பட்டு தரமான தார்சாலையை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், தரமற்ற முறையில் மேற்கொள்ளப்படும் இச்சாலை பணிகளை கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரடியாகப் பார்வையிட்டு தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டம் நடத்தப்படும். தேவைப்பட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் முடிவெடுக்கவும் தயங்க மாட்டோம் என வெ.தளவாய்புரம் கிராம மக்கள் தெரிவித்தனர்.