×

மாவோயிஸ்ட் நடமாட்டத்தை தடுப்பது குறித்து 4 மாநில டிஜிபிக்கள் நாளை ஆலோசனை

ஊட்டி, பிப். 22:  மாவோயிஸ்ட் நடமாட்டத்தை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகையில் நாளை (23ம் தேதி) நடக்கிறது. இதில், தமிழகம், கேரளா,புதுச்சேரி, கர்நாடக ஆகிய நான்கு மாநிலங்களை சேரந்த டிஜிபி.,க்கள் கலந்து கொள்கின்றனர். தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இவர்கள், எல்லைகளில் உள்ள பழங்குடியின கிராமங்களில் உள்ள மக்களை மூளை சலவை செய்து, அரசுக்கு எதிராக திசை திருப்பும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தடுக்க தமிழகம்-கேரள எல்லையில் இரு மாநில போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், எல்லையோரங்களில் முகாம் அமைத்து பாதுகாப்பு பணியல் ஈடுபடுகின்றனர்.

அதேபோல்,சுற்றுலாபயணிகள் போல் மாவோயிஸ்ட்கள் ஊருக்குள் புகுந்துவிடாத வகையில் எல்லைகளில் சோதனை சாவடி அமைத்து 24 மணி நேரமும் பாதுகாப்பு படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதுமட்டுமின்றி மாவோயிஸ்ட்களை கட்டுப்படுத்த போலீசார் மற்றும் நக்சல் தடுப்பு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மாவோயிஸ்ட் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் ஊட்டியில் உள்ள தமிழக மாளிகையில் நாளை(23ம் தேதி) நடக்கிறது. இதில் தமிழக டிஜிபி., ராஜேந்திரன், கர்நாடக மாநில டிஜிபி., நீலமணி ராஜூ, கேரள மாநில டிஜிபி., லோக்நாத் பெசரா, பாண்டிச்சேரி டிஜிபி., சுந்தரிநந்தா ஆகியோர் தலைமையில் 5 ஏடிஜிபி.,க்கள், 4 டிஐஜி.,க்கள், 4 ஐஏஸ்., அதிகாரிகள், 10க்கும் மேற்பட்ட எஸ்பி.,க்கள் என மொத்தம் 28  உயர் அதிகாரிகள் கலந்துக் கொள்கின்றனர்.

Tags : state ,Maoist ,
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...