×

மக்கள் தொகை உயர்வால் உணவு, குடிநீர் பற்றாக்குறை வர வாய்ப்பு சிக்ரி கருத்தரங்கில் பகீர் தகவல்

காரைக்குடி, பிப்.22: உலகஅளவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக உணவு, குடிநீர், எரிசக்தி பற்றாக்குறை அதிகஅளவில் வரவாய்ப்புள்ளது என விஞ்ஞானி தெரிவித்தார். காரைக்குடி சிக்ரியில் பி.டெக் மாணவர்கள் சார்பில் தொழில்நுட்ப வளர்ச்சி அடுத்த தலைமுறையை பாதிக்காத வகையில் ஆராயச்சி மேற்கொள்வது குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. சந்தோஷ்குமார் வரவேற்றார். மூத்த விஞ்ஞானி வேலாயுதம் தலைமை வகித்தார். டீன் ரமேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். விஞ்ஞானி கார்த்திக் குமார் பேசுகையில், ‘‘சிக்ரியில் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் சேர்ந்து படிப்பதால் அவர்களுக்கு ஆராய்ச்சி மனப்பான்மை அதிகஅளவில் உள்ளது. கடந்த 100 வருடங்களில் மக்கள் தொகை 5 பில்லியன் அளவு கூடி உள்ளது. முன்பு உலகஅளவில் 2.7 பில்லியன் மக்கள் தொகை தான் இருந்தது. தற்போது 7.7 பில்லியன் மக்கள் தொகை உள்ளது.

மக்கள் தொகை உயர்வால் குடிநீர், உணவு, எரிசக்தி பற்றாக்குறை வரவாய்ப்புள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பு, வனங்கள் அழிப்பது, சுற்றுச்சூழல் மாசுபடுதல் போன்ற காரணங்களால் இன்னும் 50 ஆண்டுகளில் தண்ணீர் தடுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மக்களின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் ஆராய்ச்சிகள் அமைய வேண்டும். இளைய தலைமுறையினருக்கு செல்போனால் சிந்திக்கும் திறன் குறைந்து வருகிறது. ஆராய்ச்சியில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் அதிகஅளவில் சிந்திக்க வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியை உதவிக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். அதனையே நம்பி இருக்க கூடாது. புதிய பொருட்களை கண்டுபிடிக்கும் போது அது சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மக்கும் தன்மையுடன் கண்டுபிடிக்க வேண்டும்’’ என்றார். கருத்தரங்கில் தமிழகம் முழுவதிலும் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 100 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன.

Tags : seminar ,Sikri ,
× RELATED சேது பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்