×

பாலையம்பட்டியில் மின்நிலையம் அருகே பயங்கர தீ விபத்து

அருப்புக்கோட்டை, பிப்.22: அருப்புக்கோட்டை அருகே உபமின்நிலையம் அருகே உள்ள குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி ஊராட்சி உள்ளது. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் ஊராட்சி மூலம் மதுரை- தூத்துக்குடி நான்குவழிச்சாலை செல்லும் பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டில் கொட்டப்படுகின்றன. இதற்கு அருகில் மின்சார வாரியத்தின் உபமின்நிலையம் உள்ளது. இங்கிருந்து பாலையம்பட்டி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது. இங்கு தான் ஊரில் உள்ள குப்பைகள் அனைத்தையும் சேகரித்து கொட்டுகின்றனர். சில சமயம் குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். அப்போது அருகில் உள்ள உபமின்நிலையம் வரை தீ பரவுகிறது. இதனால் டிரான்ஸ்பார்மர் வெடிக்கும் சூழ்நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு மின்வாரியத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு குப்பைகளை கொட்டக்கூடாது என பலமுறை அறிவுறுத்தியும் நிறுத்துவதில்லை.இந்நிலையில் நேற்று இங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகளுக்கு தீ வைத்து விட்டனர். இதனால் தீ காற்றில் நன்கு பரவி டிரான்ஸ்பார்மர் வரை சென்றது. பயந்து கொண்டு அங்கு வேலை செய்த அலுவலர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறினர். இதுகுறித்து அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதனால் மின்வாரியத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் தப்பியது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : fire accident ,powerhouse ,
× RELATED கொசுவர்த்தி தீயால் விபத்து கணவர், மனைவி பரிதாப சாவு