×

அமைச்சர் வீரமணி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

வேலூர், பிப்.22: வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் ₹300 கோடி மதிப்புள்ள நில பேர விவகாரம் தொடர்பாக அமைச்சர் கே.சி.வீரமணி வீடு, தொழிலதிபர் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சாய் சிட்டி சென்டர் என்ற பெயரில் இயங்கும் ₹300 கோடி மதிப்பிலான நில விவகாரத்தில் அமைச்சர் கே.சி.வீரமணியின் தலையீடு இருப்பதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபர்களான ராமமூர்த்தியும், ஜெயப்பிரகாசும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று அமைச்சர் வீரமணியும் சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் அறிக்கையும் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டியில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டுக்கு நேற்று காலை 6 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் 3 காரில் திடீரென வந்தனர். அப்போது, அமைச்சர் வீட்டில் இல்லை.ஆனாலும் அதிகாரிகள் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து தங்களது சோதனையை தொடங்கினர். தொடர்ந்து 6.30 மணி வரை இந்த சோதனை நடந்தது. மேலும், வீட்டில் இருந்தவர்களிடமும் விசாரணை நடத்தினர். சோதனையின் போது வெளியாட்கள் யாரையும் உள்ளே செல்லவோ, வீட்டில் இருந்தவர்களை வெளியே செல்லவோ அனுமதிக்கவில்லை.

இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து ஜோலார்பேட்டை-நாட்றம்பள்ளி சாலையில் உள்ள அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபம், அமைச்சரின் 2வது மனைவி பத்மாசினி வீடு, கோவிந்தராஜ் நகரில் உள்ள திருமண மண்டப கணக்காளர் சத்தியமூர்த்தி வீட்டிலும் மதியம் 12.30 மணி வரையில் சோதனை நடந்தது. அப்போது திருமண மண்டபம் மற்றும் கணக்காளர் சத்தியமூர்த்தி வீட்டில் இருந்து முக்கிய ஆவணைகளை கைப்பற்றி எடுத்து சென்றனர். அமைச்சரின் 2வது மனைவி பத்மாசினி கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காலை 9 மணிக்கு 6 பேர் கொண்ட மற்றொரு குழுவினர் ஜோலார்பேட்டை சோலையூர் அருகே விவசாய நிலத்தில் வசித்து வரும் அதிமுக நகர செயலாளரும், அமைச்சரின் நேர்முக உதவியாளருமான எஸ்.பி.சீனிவாசன்(45) வீட்டிலும் சோதனை நடந்தது. வீட்டின் கதவை தாழிட்டு கொண்ட அதிகாரிகள் சீனிவாசன் மற்றும் அவரது மனைவி வசுமதி ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். வசுமதி கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை ஜோலார்பேட்டை நகராட்சி தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பால்நாங்குப்பத்தில் அமைச்சரின் நண்பரும், தனியார் திருமண மண்டப உரிமையாளருமான கண்ணன் என்பவரை அவரது வீட்டில் இருந்து காலை 10 மணியளவில் அமைச்சரின் திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அமைச்சரின் உதவியாளர், நண்பர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால் முக்கிய ஆவணங்கள் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நடந்து வரும் சோதனை, விசாரணையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல், வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகர் விவேகானந்தர் நகரை சேர்ந்த சாய் சிட்டி சென்டர் நில விவகாரத்தில் தொடர்புடைய ரியல் எஸ்டேட் அதிபர் ராமமூர்த்தி ரெட்டியாரின் வீட்டுக்குள் நேற்று காலை 6.30 மணியளவில் சென்னையில் இருந்து 3 கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 12 பேர் கொண்ட குழுவினர் திடீரென நுழைந்தனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து இருப்பது தொடர்பாகவும், அதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் ராமமூர்த்தி உட்பட அவரது குடும்ப உறுப்பினர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஆய்வு மேற்கெள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் அவரது தம்பி மோகன்ரெட்டி வீட்டிலும் அதிகாரிகள் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் ராமூர்த்தியின் நண்பரும் தொழிலதிபருமான காட்பாடி கோபாலரத்தினம் நகரில் உள்ள ஜெயப்பிரகாஷ் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ராமமூர்த்தியின் அலுவலகத்திலும் சோதனை நடத்தி, அங்கிருந்த ஆவணங்களையும் கைப்பற்றினர்.

இதுதவிர காட்பாடி தாலுகா கே.வி.குப்பம் ரூசா டவுன்ஷிப் பகுதியை சேர்ந்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் சிவக்குமார் வீட்டிலும் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு இடங்களிலும் சோதனையை முடித்துக்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் காட்பாடியில் உள்ள ராமமூர்த்தி வீட்டிற்கு மதியம் 2 மணியவில் வந்தனர். தொடர்ந்து ஆவணங்களை தணிக்கை செய்யும் தனி அதிகாரிகள் குழுவும் வந்தது. அங்கு அவர்கள் விசாரணையின் இடையே ஒவ்வொரு ஆவணமாக ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்த பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதா? வருமானத்துக்கு ஏற்ப அரசுக்கு வரி செலுத்தப்பட்டதா? என ராமமூர்த்தியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினரின் அதிரடி ரெய்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



வேலூர் மாவட்டத்தில் சோதனை நடந்த இடங்கள்

1. ஜோலார்பேட்டையில் உள்ள அமைச்சர் கே.சி.வீரமணி வீடு.

2. ஜோலார்பேட்டை இடையம்பட்டியில் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபம்.

3. அமைச்சர் வீரமணியின் 2வது மனைவி பத்மாசினி வீடு.

4. அமைச்சரின் உதவியாளர் சீனிவாசன் வீடு.

5. திருமண மண்டப மேலாளர் சத்தியமூர்த்தி வீடு

6 காட்பாடி காந்தி நகர் ரியல் எஸ்டேட் அதிபர் ராமமூர்த்தி வீடு, அலுவலகம்.

7. விவேகானந்தர் நகரில் உள்ள ராமமூர்த்தியின் தம்பி மோகன் வீடு.

8. பாரதி நகரில் உள்ள ராமமூர்த்தியின் நண்பர் ஜெயப்பிரகாஷ் வீடு.

9. கே.வி.குப்பத்தில் ஒப்பந்ததாரர் சிவகுமாரின் வீடு உள்பட பல்வேறு இடங்கள்.


1. ஜோலார்பேட்டை-நாட்றம்பள்ளி சாலையில் உள்ள அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்த சென்றனர்.

2. அமைச்சரின் 2வது மனைவி பத்மாசினி வீடு.

3. ஜோலார்பேட்டை கோவிந்தராஜ் நகரை சேர்ந்த திருமண மண்டபம் கணக்காளர் சத்தியமூர்த்தியின் வீடு.

4. சத்திய மூர்த்தியின் வீட்டில் இருந்து கைப்பற்றிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

5. ஜோலார்பேட்டையில் உள்ள அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு.

..........

1. வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள்.

2. காட்பாடி காந்தி நகர் விவேகானந்தா நகரில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் ராமமூர்த்தி வீடு.

3. காட்பாடி கோபாலரத்தின நகரில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் ஜெயபிரகாஷ் வீடு.

4. காட்பாடி பாரதி நகரில் உள்ள ராமமூர்த்தி தம்பி மோன் ரெட்டி9 வீடு.

Tags : house ,Income Tax Department ,home ,Veeramani ,
× RELATED நேற்று அதிமுக கூட்டணி இறுதி; இன்று...