×

திருப்போரூரில் இருந்து கூடுவாஞ்சேரி வரை சாலையில் உள்ள வளைவுகளை சீரமைக்க வேண்டும்

திருப்போரூர், பிப்.21: திருப்போரூரில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் சாலையில் உள்ள வளைவுகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். திருப்போரூரில் இருந்து இள்ளலூர், நெல்லிக்குப்பம் வழியாக கூடுவாஞ்சேரிக்கு 23 கிமீ தூர சாலை உள்ளது. இதில் பல இடங்களில் சாலை வளைவை சரி செய்யாமல் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஜிஎஸ்டி சாலையையும், ஓஎம்ஆர் சாலையையும் இணைக்கும் வகையில் இச்சாலை உள்ளதால் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டு மனைப்பிரிவுகள், கல்லூரிகள் உள்ளன. இதனால் மக்கள் தொகை பெருக்கத்தோடு வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

திருப்போரூர் - கூடுவாஞ்சேரி இடையிலான சாலை தரமானதாக போடப்பட்டாலும், பல இடங்களில் ஆபத்தான வளைவுகள் உள்ளதால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இள்ளலூர் கிராமத்தில் வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஆபத்தான வளைவில் இதுவரை 10க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. 4 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட கனமழை வெள்ளத்தில் இந்த சாலை துண்டானது. மீண்டும் சாலை அமைக்கப்படும்போது வளைவை சரி செய்யாமல் பழைய நிலையிலேயே அமைத்து விட்டனர். இதனால் எதிரே வரும் வாகனங்கள் பார்க்க முடியாத நிலை உள்ளது.

இதன் காரணமாக விபத்துகள் அதிகரித்துள்ளன. எனவே, நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் இள்ளலூர் பகுதியில் உள்ள ஆபத்தான வளைவை சரி செய்து  நேராக அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.
அதேபோல் கூடுவாஞ்சேரி வரை பல இடங்களில் சாலை வளைவுகள் ஆபத்தான முறையில் அமைந்துள்ளன. இவற்றையும் நேராக்கி பாதுகாப்பான பயணத்திற்கு வழி செய்ய வேண்டும். வேகத்தடை, எச்சரிக்கை பலகை, பிரதிபலிப்பான் ஆகியவை வைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags : Guduvancheri ,road ,
× RELATED கல்குவாரியில் செல்பி எடுத்தப்போது...