×

முளைக்கொட்டு திருவிழா துவக்கம் ஆப்பனூரில் மாட்டுவண்டி பந்தயம்

சாயல்குடி, பிப். 21: கடலாடி அருகே ஆப்பனூரில் முளைக்கொட்டு திருவிழா துவக்கத்தையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. ஆப்பனூர் அரியநாயகி அம்மன் வருடாந்திர மாசா திருவிழா ஒரு மாதம் நடக்கும். மாசி மாத முதல் செவ்வாய்க் கிழமையில் முள்ளிசெடி ஊன்றப்பட்டு திருவிழா துவங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவில் அரியநாயகிஅம்மன் கோயில் பகுதியிலிருந்து முள்ளி செடி எடுக்கப்பட்டு, அதற்கு பால், மஞ்சள் உள்ளிட்ட பலவகை அபிஷேகம் செய்து, பாராம்பரிய இசை வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து, ஆப்பனூர் ஊர் மையப்பகுதியில் அமைந்துள்ள முளைக்கொட்டு திண்ணையில் ஊண்டப்பட்டது. முள்ளிக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பெண்கள் கும்மியடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் திருவிழாவை ஒரு மாதம் கொண்டாடுவர்.

துவக்க நாளையொட்டி நேற்று மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. ஆப்பனூர் முதல் ஒருவானேந்தல் வரை சுமார் 10 கி.மீ. தூரம் வண்டிகள் சென்று திரும்பியது. 10 வண்டிகள் கலந்து கொண்ட பந்தயத்தில் முதலிடத்தை எம்.கரிசல்குளம் மயில்வாகணன் மாடுகளும், இரண்டாம் இடத்தை ஆப்பனூர் முத்திருளாண்டி மாடுகளும், மூன்றாம் இடத்தை எம்.கரிசல்குளம் முத்துராமலிங்கம் மாடுகளும் பெற்றன. மாடுகளின் உரிமையாளர்களுக்கும், வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் ரொக்க பணமும், குத்துவிளக்கு, வெங்கல பாத்திரங்கள் பரிசுகளாக வழங்கப்பட்டது.

Tags : Bullock ,festivals ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 3 மாட்டுவண்டிகள் பறிமுதல்