×

குமரி மாவட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2ம் நாளாக வேலைநிறுத்தம் சேவைகள், அலுவலக பணிகள் கடும் பாதிப்பு

நாகர்கோவில், பிப்.20: பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தம் நேற்று இரண்டாவது நாளாக நீடித்த நிலையில் வாடிக்கையாளர் சேவைகள், அலுவலக பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
பிஎஸ்என்எல்-க்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசு விதிகளின்படி மட்டுமே பணியாளர்களிடம் இருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும். பிஎஸ்என்எல் நில மேலாண்மை கொள்கைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். வங்கிகளில் இருந்து கடன் பெறுவதற்கு உரிய ஆவணங்களை வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் இயக்குநர் குழுவில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப வேண்டும். பிஎஸ்என்எல் டவர்களை செயல்படுத்தவும், பராமரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள அவுட்சோர்சிங்கை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்ைககளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் அனைத்து ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் மூன்று நாட்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
வேலைநிறுத்த போராட்டம் கடந்த 18ம் தேதி முதல் தொடங்கியது. குமரி மாவட்டத்தில் 7 பிஎஸ்என்எல் நேரடி சேவை மையங்கள், 44 தொலைபேசி நிலையங்களில் 410 பேர் பணியாற்றி வருகின்ற நிலையில் பெரும்பாலானவர்கள் நேற்றைய வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டனர். இதனை போன்று 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். இண்டாம் நாளாக நேற்றும் வேலைநிறுத்தம் தொடர்ந்தது. இதனால் பிஎஸ்என்எல் சேவை மையங்கள் பணியாளர்களின்றி வெறிச்சோடியது. அதிகாரிகள், ஊழியர்கள் என்று அனைத்து தரப்பினரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் அலுவலக பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் ெதாலைபேசி நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் அனைத்து ஊழியர் சங்க கூட்டமைப்பு தலைவர் லட்சுமணபெருமாள் தலைமை வகித்தார். அமைப்பாளர் ராஜூ, அதிகாரிகள் சங்க அகில இந்திய பொருளாளர் ராஜன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜார்ஜ், பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ரோஸ் சிரில் சேவியர், செல்வம், ராஜேந்திரன், பிரிட்ேடா சாம், மோசஸ், அஜய், பத்மநாபன், பாப்பாத்தி, மாயாண்டி, முருகானந்தம், மணிகண்டன், அனில்குமார், அன்வர் சலீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : BSNL ,district ,Kumari ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...