×

உலகளந்த பெருமாள் உள்பட 100 சுவாமிகள் தீர்த்தவாரி மாசிமக திருவிழாவில் பக்தர்கள் குவிந்தனர்

கடலூர்,  பிப். 20: கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நேற்று நடந்த மாசிமகத்  திருவிழாவில் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட  சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. கடலூர் தேவனாம்பட்டினம்  கடற்கரையில் நேற்று மாசி மகம் திருவிழா நடந்தது. திருக்கோவிலூர் உலகளந்த  பெருமாள் தங்க பல்லக்கில் எழுந்தருளினார். கடலூர் வரதராஜ பெருமாள்,  திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் சுவாமிகளின் உற்சவர் சிலைகளும்  அலங்கரிக்கப்பட்டு உடன் கொண்டு வரப்பட்டன. உலகளந்த பெருமாளை  தரிசிப்பதற்காகவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தோடு மாசி மகத்துக்கு  வந்திருந்தனர். கடலில் வேதபாராயணங்களோடு உலகளந்த பெருமாள் உற்சவருக்கு  தீர்த்தவாரி நடந்தது. அப்போது அவர்களும் கடலில் புனித நீராடி அவரை  வழிபட்டனர். மேலும் திருமானிக் குழி அம்புதாட்சி சமேத  வாமனபுரீஸ்வரர், திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி சமேத பாடலேசுவரர்,  திருவந்திபுரம் செங்கமலத்தாயார் சமேத தேவநாத சுவாமிகள், வரதராஜ சுவாமிகள்,  வண்டிப்பாளையம் சுப்ரமணிய சுவாமிகள், வெள்ளப்பாக்கம், குணமங்கலம் மாரியம்மன்  கோயில் மற்றும் 100க்கும் மேற்பட்ட கோயில்களில் இருந்து உற்சவ  மூர்த்திகள் மேளதாளம், பேண்டுவாத்தியம், தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக  கொண்டு வரப்பட்டு தேவனாம்பட்டினம் கடலில் தீர்த்தவாரி நடந்தது. பின்னர்  சிறப்பு பூஜை நடந்தது.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். பலர்  கடலில் நீராடி மறைந்த தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மாசிமக கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மாசி மகத்தை முன்னிட்டு அரசு  போக்குவரத்து கழகம் சார்பில் தேவனாம்பட்டினத்திற்கு சிறப்பு பஸ்கள்  இயக்கப்பட்டன. தீர்த்தவாரி முடிந்த பின் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள்  சுவாமிக்கு மஞ்சக்குப்பம் தனியார் பள்ளி வளாகத்தில் மண்டகபடி நடைபெற்றது.  இரவு திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோயிலில் இரவு உற்சவம்  நடைபெற்றது. கடலூர் துறைமுகம் பச்சாங்குப்பம் பகுதி பரவனாற்றில்  நடந்த மாசிமக விழாவில்  பச்சையாங்குப்பம், குடிகாடு, காரைக்காடு,  வைரங்குப்பம், மாலுமியார்பேட்டை, மணக்குப்பம், பொன்னையாங்குப்பம்,  சுத்துக்குளம், ஈசனார்குப்பம், செம்மங்குப்பம், மதுக்கரை உள்ளிட்ட 18  கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட அம்மன் கோயில் உற்சவர்களுக்கு  தீர்த்தவாரி நடைபெற்றது.  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில்  சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. டிஎஸ்பி சாந்தி  தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 150 பேர் பாதுகாப்பு  மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

கடலில் மீட்பு படகுகளும்,  நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர். கண்காணிப்பு கோபுரங்களில்  இருந்து காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டதோடு அவ்வப்போது பொது  மக்களை விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கையும் செய்தனர். கடந்த ஆண்டுகளில்  இல்லாத வகையில் இந்த ஆண்டு கூட்டம் அதிகமாக இருந்தது. கடற்கரை சாலையில்  ஒரே சமயத்தில் ஏராளமான சாமிகள் வரிசையாக ஊர்ந்து சென்றன. வழிநெடுகிலும்  பக்தர்கள் அன்னதானமும் நீர்மோரும் வழங்கினர். சிதம்பரம்:சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை கடற்கரையில் மாசிமகத் திருவிழா நேற்று நடந்தது. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து காளியம்மன், மாரியம்மன், பெருமாள் உள்ளிட்ட ஏராளமான சுவாமிகள் காலை முதல் வரிசையாக கிள்ளை கடற்கரைக்கு வந்தன. கிள்ளை அருகே முழுக்குத்துறையில் ஒவ்வொரு சுவாமியாக தீர்த்தவாரி அளித்தன. தீர்த்தவாரியை காண சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, பரங்கிப்பேட்டை, கிள்ளை பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். மாசிமகத்தை முன்னிட்டு சிதம்பரத்தில் இருந்து சிறப்பு அரசு நகர பேருந்துகள் விடப்பட்டிருந்தன. கிள்ளை கடற்கரையில் சிதம்பரம் நடராஜரின் பிரதிநிதியான சந்திரசேகரசாமி, முஷ்ணம் பூவராக சுவாமி ஆகியவை தீர்த்தவாரியில் பங்கேற்றன. பூவராகசாமிக்கு தைக்கால் பகுதியில் முஸ்லிம் சமுதாயத்தினர் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். பின்னர் பூவராகசாமி முழுக்குத்துறையில் எழுந்தருளி தீர்த்தவாரியளித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags : Krishna ,
× RELATED பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள்...