×

8 வழிச்சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு அரூர் ஆர்டிஓ ஆபிசில் விவசாயிகள் தர்ணா

அரூர், பிப்.20: 8 வழிச்சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை தெரிவிக்க வந்த இடத்தில் அரூர் ஆர்டிஓ அலுவலகத்தில் விவசாயிகள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு வலுத்துள்ளது. இந்நிலையில், நிலம் எடுக்கும் பணியை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். இதுதொடர்பாக ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்ளுக்கு சம்மன் அனுப்பி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நிலம் எடுக்க விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆட்சேபனை தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்த விவசாயிகள் நேற்று அரூர் பழையப்பேட்டை பைபாஸ் சாலையில் இருந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர். அலுவலகத்தை அடைந்ததும், நிலத்தை கையகப்படுத்துவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து கோஷங்களை எழுப்பியவாறு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 8 வழிச்சாலைக்கு நிலம் கொடுக்கமாட்டோம் என கோஷமிட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஏற்கனவே சேலத்திலிருந்த சென்னைக்கு செல்ல கள்ளக்குறிச்சி, தர்மபுரி, அரூர், வாணியம்பாடி வழியாக 3 சாலைகள் உள்ளது. இந்நிலையில், புதியதாக சாலை அமைத்து விவசாய நிலங்களை அழித்து உணவிற்கு அலையவிடும் நிலைக்கு மக்களை ஆளாக்கும் இந்த திட்டத்திற்கு நிலத்தை கொடுக்கமாட்டோம் என்றனர்.

Tags : Farmers Dharna ,Office ,Officer ,RTO ,pavilions ,land ,
× RELATED குமரி கலெக்டர் அலுவலக தேர்தல்...