×

நீடாமங்கலம் தாலுகா அலுவலகம் அருகில் தீயணைப்பு நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் வலியுறுத்தல்

நீடாமங்கலம்,பிப்.20: நீடாமங்கலத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றாமல் தாலுகா அலுவலகம் அருகிலேயே செயல்பட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர்  மாவட்டம் நீடாமங்கலம் தீயணைப்பு நிலையம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் வெண்ணாறு லயன்கரை அருகில் தற்போது உள்ள உழவர் சந்தையில் இயங்கியது.அதன் பிறகு பழைய தாலுகா அலுவலகம் அருகில் உள்ள சத்திரம் கட்டிடத்திலும்,பிறகு கீழராஜவீதி சிவன் கோயில் அருகிலும்,அதன் பிறகு தற்போது கொத்தமங்கலம் சாலையிலும்  தீயணைப்பு நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் இல்லாமலேயே வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.ஆனால் தற்போதைய வாடகை கட்டிடத்திற்கு ரூ.12,500 மாத வாடகை கொடுப்பதாக கூறப்படுகிறது. இந்லையில் வாடகை வீட்டு உரிமையாளர் இடத்தை காலி செய்ய வேண்டும் என்றதால் எங்கு செல்வது என தீயணைப்பு வீரர்கள் விரக்தியடைந்துள்ளனர். 

தற்போது செயல்பட்டு வரும் தீயணைப்பு நிலையத்திலிருந்து அவசரத்திற்கு செல்லும் போது  5 வளைவுகள் உள்ளது.காலை, மாலை நேர அவசரத்திற்கு செல்ல வேண்டுமானால் பள்ளி மாணவர்கள் வரும் நேரமாக இருந்தால் மிகவும் சிரமமாக இருக்கிறது.இதையும் மீறி சென்றால் ரயில்வே கேட் அடிக்கடி போடப்படுகிறது  இதனால்  நேரத்திற்கு செல்ல முடியவில்லை.அதற்குள் செல்ல வேண்டிய இடத்திற்கு முன் பாதிப்பு ஏற்படுகிறது.  இந்நிலையில் இந்த தீயணைப்பு நிலையத்தை புதுத் தெருவில் உள்ள வாடகை கட்டிடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக நீடாமங்கலம் மக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.அவர்கள் கூறுகையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக  வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் தீயணைப்பு நிலையத்திற்கான இடம் தற்போது 5 கிமீ தூரத்தில் தஞ்சை சாலையில் ஆதனூரில் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று வர தாமதமாகும்.எனவே கலெக்டர் நடவடிக்கை எடுத்து நீடாமங்கலம் நகரில் உள்ள பழைய தாலுகா அலுவலகம்,புதிய தாலுகா அலுவலகம்,பேரூராட்சி அருகில் உள்ள பழைய விஏஓ அலுவலகம் அல்லது சத்திர கட்டிடத்தில் நிரந்தரமாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : office ,Nedumangalam Taluk ,fire station ,
× RELATED கரூர் தீயணைப்பு நிலையத்தில்...