×

பேராவூரணி நகரில் 2 பயணிகள் நிழற்குடைகள் சேதம் சாலையோரம் நிற்கும் பொதுமக்கள்

பேராவூரணி, பிப். 20: பேராவூரணி நகரில் 2 பயணிகள் நிழற்குடை சேதமடைந்துள்ளது. எனவே உட்கார வசதியின்றி சாலையோரம் பேருந்துக்காக பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.
பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சியில் பட்டுக்கோட்டை சாலையில் அரசு நூலகம் அருகிலும், பழைய பேருந்து நிலையத்திலும் சில ஆண்டுகளுக்கு முன் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்த நிழற்குடையில் பயணிகள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டது. தற்போது இருக்கைகள் சேதமடைந்துள்ளது. ஒரு சில இருக்கைகளை சமூகவிரோதிகள் பெயர்த்து எடுத்து சென்றுவிட்டனர். இதனால் பயணிகள் அமர்வதற்கு போதிய வசதி இல்லாத நிலை உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினசரி பேராவூரணிக்கு பேருந்துகளில் வந்து செல்லும் பொதுமக்கள் வெயில் காலம் துவங்கி விட்டதால் பேருந்துக்காக காத்திருக்கும் நேரத்தில் அமர முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் கஜா புயலால் பயணிகள் நிழற்குடையின் மேற்கூரைகளும் சேதமடைந்துள்ளது.
எனவே 2 பயணிகள் நிழற்குடைகளையும் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் மெய்ச்சுடர் வெங்கடேசன் கூறியதாவது: பயணிகள் அமர்வதற்க்கு வசதியற்ற நிலையில் நகரத்தின் மத்தியில் உள்ள 2 பயணிகள் நிழற்குடைகளும் உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் உடனடியாக சீரமைத்து மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பெண்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைத்துத்தர வேண்டும் என்றார்.

Tags : passengers ,city ,roads roads ,Peravurani ,
× RELATED டெல்லியில் இன்று இயக்கப்பட இருந்து 82...