×
Saravana Stores

குண்டும் குழியுமாக உள்ளது முத்துபட்டணம் பால்குட வீதி படுமோசம் திருவிழாவிற்கு முன் சரி செய்யப்படுமா?

காரைக்குடி, பிப்.20:  மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் பால்குட விழா துவங்க உள்ள நிலையில் பல லட்சம் பக்தர்கள் பால்குடம் எடுத்து செல்லும் சாலைகள் நடக்க கூட முடியாத அளவில் குண்டும் குழியுமாக உள்ளது. இதை சரி செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரைக்குடி  நகராட்சி பகுதியில்  பாதாளசாக்கடை திட்டம் நடந்து வருவதால் பல்வேறு சாலைகள் பயன்படுத்த முடியாத அளவில் குண்டும், குழியுமாக உள்ளது.  இப்பகுதியை பொறுத்தவரை மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவில் மாசி பங்குனி விழா வரும் 26ம் தேதி பூச்சொரிதலுடன் துவங்குகிறது. அதனை தொடர்ந்து மார்ச் 19ம் தேதி பால்குட விழா நடக்கவுள்ளது.  தமிழகம் முழுவதிலும் இருந்து பல லட்சம் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.  கண்டனூர் சாலை அருகே உள்ள முத்தாலம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து அங்கிருந்து பல்வேறு வீதிகள் வழியாக  சென்று கோவிலை அடைவார்கள். 4 கிலோ மீட்டருக்கு மேல் சிறுவர்கள், பெரியவர்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் காலணி அணியாமல் பால்குடம் எடுத்து செல்வார்கள்.

ஆனால் பக்தர்கள் நடந்து செல்லக்கூடிய இச்சாலைகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. சாலைகள் முழுவதும் பள்ளம், கல் பெயர்ந்து காணப்படுகிறது.  அனைத்து இடங்களிலும் பக்தர்கள் நடந்து செல்ல முடியாத அளவில் பள்ளம், படுகுழிகளாக காட்சியளிக்கிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘மீனாட்சிபுரம் பகுதிக்கு வரக்கூடிய முக்கிய சாலையாக உள்ள முத்துபட்டணம் சாலை மிகவும் மோசமான நிலையில் பாதாளசாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்ட குழிகளுடன் உள்ளது. இதனால் பக்தர்கள் நடந்து செல்லமுடியாத நிலை உருவாகும். தவிர அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பால்குடம், தீ சட்டி எடுத்து செல்லும்போது தடுமாறி விழகூடிய நிலை உருவாகும். பால்குட விழாவின் போது பக்தர்கள் முத்தலாம்மன் கோவிலில் இருந்து முத்துமாரியம்மன் கோவில் வரை 4 கிலோ மீட்டர் அங்கபிரதட்சணம் (சாலையில் உருண்டு வருவது) வருவார்கள்.  எனவே போர்க்கால அடிப்படையில்  பக்தர்களின் வசதிக்காக இச்சாலையை சரி செய்ய எம்.எல்.ஏ நடவடிக்கை எடுக்க  வேண்டும்’’ என்றனர்.

Tags : road ,carnival festival ,Muthupattinam Balguda ,
× RELATED 2 துறைகளிடைய நிர்வாக பிரச்னை காரணமாக...