×

கழிவுநீர் கலப்பது குறித்து திருமணிமுத்தாற்றில் ஆய்வு

சேலம், பிப். 20: கழிவுநீர் கலப்பது குறித்து மத்திய மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் குழுவினர், திருமணிமுத்தாற்றில் அதிரடியாக ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  ஏற்காடு மலையில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு, சேலம், நாமக்கல் மாவட்டங்கள் வழியாக ஓடி காவிரியில் கலக்கிறது. இந்த திருமணி முத்தாற்றில், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் உள்ளாட்சிகளின் சாக்கடைகளும் கலப்பதால் திருமணிமுத்தாறு மாசடைந்து விட்டதாக மாணிக்கம் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதிகள், ‘‘சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக சேலம் மாநகராட்சி நிர்வாகம் இடைக்கால இழப்பீடாக ₹25 லட்சத்தை மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் செலுத்த வேண்டும். மேலும், மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் ₹50 லட்சம் உத்தரவாத தொகையையும் சேலம் மாநகராட்சி செலுத்த வேண்டும். சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்படாது என்றும், அதை தடுக்க 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்து செயல்படுத்த வேண்டும். அப்படி செய்ய தவறினால் ₹50 லட்சம் பறிமுதல் ெசய்யப்படும். தற்போதைய நிலவரத்தை அறிய மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளும், மாநில மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளும் கூட்டாக ஆய்வு செய்து, ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,’’ என்று உத்தரவிட்டனர்.

தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் அளித்த உத்தரவை தொடர்ந்து, மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் 3 பேர் அடங்கிய குழுவினரும், மாநில மாசு கட்டுப்பாடு வாரியஅதிகாரிகளும் நேற்று சேலம் வந்தனர். பின்னர், அவர்கள் திருமணிமுத்தாறு உற்பத்தியாகி செல்லும்  சேலம், நாமக்கல் வழித்தடங்களில் அதிரடியாக ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, திருமணிமுத்தாறு செல்லும் வழித்தடங்களில் எந்த இடங்களில் வீட்டு கழிவு நீர் கலக்கிறது என்பதையும், தொழிற்சாலை கழிவுகள் எந்த இடங்களில் கலக்கிறது என்பதையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு பணி  3 நாட்கள் நடக்கிறது. இந்த பணி முடிவடைந்ததும், ஆய்வு அறிக்கை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் உத்தரவைதொடர்ந்து, திருமணிமுத்தாற்றில் கழிவுநீர் கலப்பது குறித்து மத்திய மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகளும், மாநில மாசுகட்டுப்பாடு அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வு அறிக்கை விரைவில் பசுமை தீர்ப்பாயத்தில் அளிக்கப்படும்,’’ என்றனர்.

Tags :
× RELATED நர்சிங் மாணவி தற்கொலை