×

நாகை புதிய கடற்கரையில் 12 பெருமாள் கோயில் உற்சவ மூர்த்திகளுக்கு மாசிமக தீர்த்தவாரி திரளான பக்தர்கள் திரண்டனர்

நாகை, பிப்.20:  நாகை புதிய கடற்கரையில்12 பெருமாள் கோவில்களின் உற்சவ மூர்த்திகளுக்கு மாசி மக தீர்த்தவாரி நடைபெற்றது. மாசி மாதத்தில் பவுர்ணமியுடன் கூடி வரும் மக நட்சத்திர நாள் அன்று மாசி மகம் கொண்டாடப்படுகிறது. மாசி மகத்தன்று கடலில் நீராடி இறைவனை வணங்கினால் நற்பேறுகளை பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. மாசி மகத்தன்று கடல் உள்ளிட்ட நீர் நிலைகளில் பிதுர்க்கடன் செலுத்தும்போது, பிதுர்களின் உள்ளம் குளிரும். இதனால் நம்மை பீடித்துள்ள கஷ்டங்கள், சாபங்கள் தீர்ந்து, தடைப்பட்ட சுபகாரியங்கள் நடைபெறும். மனக்கவலைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பார்கள். நாகை புதிய கடற்கரையில் நேற்று மாசிமக தீர்த்தவாரி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நாகை சவுந்தரராஜ பெருமாள், நாகை நவநீதகிருஷ்ணன் சுவாமி, வெளிப்பாளையம் வரதராஜ பெருமாள், பாப்பாக்கோவில் கஸ்தூரி ரெங்கநாத பெருமாள், திருக்கண்ணக்குடி தாமோதரநாராயண பெருமாள், ஆவராணி அனந்தநாராயண பெருமாள், அந்தணப்பேட்டை நித்யகல்யாண பெருமாள் உள்பட 12 பெருமாள் கோயில்களில் இருந்து  உற்சவ மூர்த்திகள், மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டனர்.

     வழிநெடுகிலும் காத்திருந்த பக்தர்கள் சாலைகளில் தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்தி கோலங்கள் இட்டு, உற்சவ மூர்த்திகள் வந்ததும் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.  மேலும் வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் சுவாமி கோவில், நீலாயதாட்சி அம்மன் கோயில், நாகை நடுவதீஸ்வரர் கோயில், குமரன் கோயில் ஆகிய கோயில்களில் உள்ள உற்சவர் சாமிகளும் புதிய கடற்கரையில் நடந்த தீர்த்தவாரியில் கலந்து கொண்டனர். புதிய கடற்கரையில் உற்சவ மூர்த்திகளுக்கு தீபதூப ஆராதனைகளும், சிறப்பு அர்ச்சனைகளும் நடைபெற்றது.

பின்னர் பட்டாச்சாரியார்கள் உற்சவ மூர்த்தியை கடலுக்கு கொண்டு சென்றனர். அங்கு பக்தர்களும் பொதுமக்களும் கடல்நீரை உற்சவ மூர்த்தி மீது வாரி இறைத்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். இதுபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் தீர்த்தவாரி நடைபெற்றது.
வேதாரண்யம்: வேதாரண்யத்தில்  வேதாரண்யேஸ்வரர் கோயில் மூர்த்தி, தலம், தீர்த்தம், ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. இக்கோயிலில் ஆண்டு பெருவிழாவான மாசிமக பெருவிழா கடந்த  1ம் தேதி கொடியேத்தத்துடன் தொடங்கியது.  இதில் நேற்று  சந்திரசேகரர் சுவாமி பெரிய வௌ்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி  நான்கு முக்கிய வீதிகள் வழியாக சென்று வேதநதி என்னும் சன்னதி கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் நீராடி இறைவனை வழிபட்டனர்.  விழாவையொட்டி கடற்கரையில் சிறப்பு மிக்க வானவேடிக்கை நிகழ்சிகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கவியரசு மற்றும் ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தினர் செய்திருந்தனர்.

Tags : devotees ,Masjid Tirtha ,shore ,Perumal ,Nagam ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...