×

ராசிபுரம் அருகே பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு புதிய தொழில் நுட்ப பயிற்சி

ராசிபுரம், பிப். 20: ராசிபுரம் அடுத்த கொழிஞ்சிப்பட்டியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில், விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கொழிஞ்சிப்பட்டியில் பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில், பட்டு விவசாயிகள் விழா மற்றும் கருத்துபட்டறை நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் தலைமை வகித்து பேசியதாவது: நாமக்கல் மாவட்டம், மழை பொழிவு குறைவாக உள்ள மாவட்டமாகும். பட்டு வளர்ப்பிற்கு நீர் அதிகம் தேவையில்லை. ஆகவே, நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு பட்டு வளர்ப்பு தொழில், நல்ல ஒரு வருமானத்திற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. தமிழகத்தில்  பட்டு வளர்ப்பில் முன்னோடி மாவட்டங்களில் ஒன்றாக நாமக்கல் திகழ்கிறது. கடந்த இரு ஆண்டுகளாக மாநில அளவில் சிறந்த பட்டு விவசாயிக்கான மூன்றாம் பரிசை, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பெற்றுள்ளனர். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் 1,338 விவசாயிகள் 2,515 ஏக்கரில் மல்பரி பயிரிட்டுள்ளனர். புதிதாக 295 விவசாயிகள் 594 ஏக்கரில் பட்டு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 140 விவசாயிகளுக்கு ₹93.25 லட்சம் நிதியுதவி அரசால் வழங்கப்பட்டுள்ளது. எனவே, குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டக்கூடிய பட்டு வளர்ப்பு தொழிலில் விவசாயிகள், பெண்கள் அதிக அளவில் ஈடுபட வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஆசியாமரியம் தெரிவித்தார்.
நிகழ்ச்சயில் பட்டு வளர்ப்பு குறித்தும், நவீன தொழில் நுட்பங்களை பயன் படுத்துவது குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மேலும்,  விவசாயிகளுக்கு பட்டு வளர்ப்பில் புதிய தொழில்நுட்பம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
    இந்நிகழ்ச்சியில் சேலம் மண்டல பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி மற்றும் தலைவர் தாஹிராபீவி, வேளாண்மை இணை இயக்குநர் சேகர் மற்றும் பட்டு வளர்ச்சித்துறை அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags : silk breeding farmers ,Rasipuram ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து