×

நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதால் சாகுபடி பணி பாதிப்பு: தடுத்து நிறுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

கரூர், பிப். 20: நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதால் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆறு சீரமைக்கப்படுமா என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.கோவை வெள்ளியங்கிரி மலையில் உற்பத்தியாகி ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை கடந்து கரூர் காவிரியில் நொய்யல் ஆறு கலக்கிறது. மிக நீளமான நொய்யல் ஆற்றினால் திருப்பூர் மாவட்டம் தான் பெருமளவில் பயனடைகிறது. திருப்பூர் சாயப்பட்டறை கழிவுகளை ஒரத்துப்பாளையம் என்ற இடத்தில் தேக்கி வைத்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் திறந்து விட்டு விடுகின்றனர். இதனால் நொய்யல் ஆறு பாசனத்தை விவசாயிகள் இழந்து விட்டனர்.  குடிநீருக்கும் கால்நடைகளுக்கும் கூட ஆற்று நீர் பயனின்றி போய் விட்டது. தொடர்ந்து ஒவ்வொரு முறையும் விவசாயிகள் போராட்டம் நடத்தியும், மனு கொடுத்தும் ஓய்ந்து போய் விட்டனர். எனினும் சாயக்கழிவு நீர் கலப்பதை தடுக்க முடியவில்லை. மழைக்காலங்களில் தொடர்ந்து சாயக்கழிவு நீரை திறந்து விடுவதால் காவிரியாற்றில் கலந்து இதனால் காவிரி நீரும் மாசுபட்டு வருகிறது.
இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், திருப்பூர் சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. சுற்றுச்சூழல் அமைச்சர் வரை முறையிட்டும் எந்த பயனும் இல்லை. நொய்யல் ஆற்றை சீரமைக்கும் திட்டம் ஒன்றை கொண்டு வந்தனர். சுமார் ரூ.13 கோடி மதிப்பீட்டில் 80 கிமீ தூரம் ஆற்றை சீரமைக்க உத்தேசிக்கப்பட்டது. ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் நிதி ஆதாரத்தை திரட்டி திட்டம் செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது.
ஏற்கனவே மாநில அரசு அளித்த பல திட்டங்களின் கோப்புகள் மத்திய அரசின் அலுவலகங்களில் தூங்கி கொண்டிருக்கிறது. மத்திய மாநில அரசுகளின் அலட்சியம் காரணமாக நொய்யல் ஆற்றின் கழிவு பாதிப்பை தொடர்ந்து அனுபவித்து பாதிக்கப்பட்டு இருக்கிறோம். இனியாவது திட்டத்தை செயல்படுத்தி கழிவுநீர் பாதிப்பில் இருந்து விவசாயத்தையும், கால்நடைகளையும் காப்பாற்ற வேண்டும் என்றனர்.

Tags : river ,Noyyal ,
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை