×

பெருங்களத்தூர் பேரூராட்சியில் ஏரியை குப்பை கிடங்காக மாற்றிய அவலம்: l தீவைத்து எரிப்பதால் சுவாச கோளாறு துப்புரவு ஊழியர்கள் அடாவடி நோய் பாதிப்பில் தவிக்கும் மக்கள்

தாம்பரம், பிப். 20: பெருங்களத்தூர் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை துப்புரவு ஊழியர்கள் ஏரியில் கொட்டி எரிப்பதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக  காட்சியளிக்கிறது. இதனால், கண் எரிச்சல், சுவாச  கோளாறு பிரச்னையால் மக்கள் தவித்து வருகின்றனர்.  தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன.  இங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகளை  கொட்டுவதற்கு முறையான இட வசதி இல்லை. இதனால், தினசரி பேரூராட்சி பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகளை பேரூராட்சி துப்புரவு ஊழியர்கள், அங்குள்ள குண்டுமேடு ஏரியில் கொட்டி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், ஏற்கனவே ஆக்கிரமிப்பு மற்றும் பராமரிப்பின்மை காரணமாக நீர்நிலைகள் அழிந்து வரும் நிலையில், தற்போது ஏரியில் குப்பையை கொட்டுவதால், நிலத்தடி நீர் மாசடைவதுடன், சுற்றுச்  சூழல் பாதிக்கப்படும், என தெரிவித்தனர். ஆனால், அதையும் மீறி குப்பை கொட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டாக கொட்டப்பட்ட குப்பை கழிவுகள் தற்போது மலைபோல் குவிந்து, ஏரிேய குப்பை கிடங்கு போல் காட்சியளிக்கிறது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து சுற்றுப் பகுதி மக்கள் மர்ம  காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக ஏரியில் குப்பையை கொட்டும் துப்புரவு ஊழியர்கள், அதனை தீவைத்து எரிப்பதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுகிறது.

 இதனால், சுற்றுப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கண் எரிச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, சிறியவர்கள், வயதானவர்கள், நோயாளிகள் ஆகியோர் கடும் அவதிக்குள்ளாகி  வருகின்றனர்.  எனவே, ஏரியில் குப்பை கொட்டுவதை தவிர்த்து, தாம்பரம், செம்பாக்கம், பல்லாவரம் நகராட்சிகளில் தினமும் சேரும் குப்பை கழிவுகளை தரம் பிரித்து, மக்கும் குப்பையை நுண் உர செயலாக்க மையங்கள் மூலம் இயற்கை உரம்  தயாரிக்கவும், மக்காத குப்பையான பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்சி முறையில் பயன்படுத்தவும் பெருங்களத்தூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை  விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பெருங்களத்தூர் பகுதியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பையை பேரூராட்சி ஊழியர்கள்  வாகனங்களில் கொண்டு சென்று, குண்டுமேடு ஏரியில் கொட்டி எரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக மாறி, சுற்றுப் பகுதிகளில் வசிப்பவர்கள் கண் எரிச்சல், மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்னையால்  அவதிப்படுகின்றனர்.

மேலும், ஏரியில் உள்ள குப்பை குவியலால் நிலத்தடி நீர் மாசடைந்து, பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி வருகிறது. நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே ஏரியை குப்பை கிடங்காக மாற்றி இருப்பது அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.
அதிகாரிகளின் இதுபோன்ற செயலால், வரும் காலத்தில் இந்த பகுதியில் ஏரி இருந்ததை வரைபடத்தில் மட்டுமே பார்க்க முடியும். எனவே, பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை தரம் பிரித்து, மக்கும்  குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கவும், மக்காத குப்பைகளை மறு சுழற்சி மூலம் மாற்று பயன்பாட்டிற்கு பயன்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரியில் உள்ள குப்பை குவியலை அகற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : lake ,Town Panchayat ,respiration workers ,
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!