×

கள்ளக்காதலுக்கு இடையூறு செய்ததால் கூலிப்படை வைத்து கணவன் கொலை... டிஎன்ஏ பரிசோதனைக்கு எலும்புகள் சேகரிப்பு: வேலூரில் மனைவி உள்பட 6 பேர் கைது

வேலூர், பிப்.20: வேலூரில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு பைனான்ஸ் ஊழியர் மாயமானதாக கொடுக்கப்பட்ட புகாரில் திடீர் திருப்பமாக அவர் கூலிப்படை வைத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக அவரது மனைவி உட்பட 6 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். வேலூர் அடுத்த பலவன்சாத்துகுப்பம் பாரதியார் நகரை சேர்ந்தவர் வெங்கட்யுவராஜ் (28), தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிப்பவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி கோமதி (24). கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 8ம்தேதி வேலைக்கு சென்ற வெங்கட்யுவராஜ், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கோமதி பாகாயம் போலீசில் தனது கணவர் மாயமாகிவிட்டதாகவும் அவரை கண்டுபிடித்து தருமாறும் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கோமதி மற்றும் வெங்கட்யுவராஜின் நண்பர்கள், அவர் வேலை பார்த்த பைனாஸ் நிறுவனத்திலும் விசாரணை நடத்தினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து வெங்கட்யுவராஜின் செல்போன் எண்ணை ஆய்வு மேற்கொண்டனர். கடைசியாக அவரது செல்போன் எண் குடியாத்தம் அடுத்த மோர்தானா அணைப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவானது தெரியவந்தது. மேலும் வெங்கட்யுவராஜின் பைக், குடியாத்தம் அருகே உள்ள ஒரு ஏடிஎம் மையம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பைக்கை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அந்த பைக்கை யார் கொண்டுவந்தது என்பது குறித்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் அதில் உருவம் எதுவும் பதிவாகவில்லை. இந்நிலையில் பாகாயம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார், கோமதியை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது வேலப்பாடியை சேர்ந்த ஸ்வீட் கடை தொழிலாளி ராஜ்குமார் (40) என்பவருடன் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் வெங்கட்யுவராஜை கூலிப்படை வைத்து ராஜ்குமார் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜ்குமார், கோமதி, ஆரணியை சேர்ந்த நண்பர் செந்தில்குமார், வேலு (32), கோட்டீஸ்வரன் (28), விஜய் (23) ஆகிய 6 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். கொலை தொடர்பாக அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: மெடிக்கல் ஷாப்பில் கோமதி பணிபுரிந்து வந்தார். அப்போது அருகே ஸ்வீட் கடையில் வேலை செய்து வந்த ராஜ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. ஒருநாள் கணவரிடம் அறிமுகம் செய்து வைக்க ராஜ்குமாரை, கோமதி தனது வீட்டுக்கு அழைத்துச்சென்றார். அப்போது ராஜ்குமாருடன் அவரது நண்பர் செந்தில்குமாரும் சென்றார். அதன்பின்னர் ராஜ்குமாருக்கும், கோமதிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாதபோது இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். இதையறிந்து அதிர்ச்சியடைந்த வெங்கட்யுவராஜ், மனைவியை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார், வெங்கட்யுவராஜை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அவரது திட்டத்தின்படி வெங்கட்யுவராஜை, செந்தில்குமார் மூலம் மோர்தானா அணைக்கு அழைத்து வரச்செய்தார். அங்கு ஏற்கனவே கூலிப்படையினர் வேலு, கோட்டீஸ்வரன், விஜய் ஆகியோருடன் ராஜ்குமார் காத்திருந்தார். அங்கு வந்த வெங்கட்யுவராஜை இவர்கள் அனைவரும் சேர்ந்து சரமாரி தாக்கி, பின்னர் கழுத்து நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் சடலத்தை மோர்தானா காட்டுப்பகுதியில் வீசிவிட்டு, பைக்கை குடியாத்தம் அருகே உள்ள ஏடிஎம் மையத்தின் அருகில் நிறுத்திவிட்டு சென்றுள்ளனர்’ இவ்வாறு போலீசார் கூறினர்.

இதனிடையே கொலை செய்து வீசப்பட்ட இடத்தில் குற்றவாளிகளை போலீசார் அழைத்து சென்றனர். அங்கு கொலை நடந்த இடத்தை அவர்கள் அடையாளம் காட்டினர். ஆனால் எலும்பு கூடுகள் மட்டுமே சிக்கின. இதனால் அந்த எலும்பு கூடுகள் யாருடையது என கண்டறிய அந்த எலும்பு கூடுகளை சேகரித்தனர். பின்னர் அதை டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். ஒன்றரை ஆண்டுக்கு பிறகு இந்த வழக்கில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Half ,Vellore ,
× RELATED கோதுமை மாவு வடை