×

மாவட்டத்தில் காட்டு தீ தடுக்க கண்காணிப்பு மையம்

ஊட்டி, பிப். 15: காட்டு தீயை தடுக்க கொலாரி பெட்டா பகுதியில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் பனிக்காலத்தின் போது பெரும்பாலான, வனங்கள் காய்ந்துவிடும். இதனால் எளிதில் காட்டு தீ ஏற்பட்டு பல ஏக்கர் பரப்பளவிலான வனங்கள் நாசமாகிறது. பொதுவாக காட்டு தீ இயற்கையாக ஏற்படுவதில்லை. சில சமூக விரோதிகள் புகை பிடித்துவிட்டு வனப்பகுதியில் சிகிரெட் துண்டுகளை வீசி செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் மட்டுமே காட்டி தீ ஏற்படுகிறது . இது போன்ற சமயங்களில் விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன.  
 எனவே, கோடை காலம் முடியும் வரை நீலகிரி வனக்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், வனங்களை ஒட்டி வசிக்கும் மக்கள், சுற்றுலா பயணிகள் வனங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். அதேபோல் எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்கள் எடுத்துச் செல்லக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
 இதுகுறித்து நீலகிரி வனக்ேகாட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன் கூறியதாவது: நீலகிரியில் கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், காட்டு தீ ஏற்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காட்டு தீயை கட்டுப்படுத்த இம்முறை கொலாரிபெட்டா பகுதியில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார். அவரிடம் செல்போன் மற்றும் ஒயர்லெர்ஸ் கருவி இருக்கும். எங்கு காட்டு தீ ஏற்பட்டாலும் அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட சரக ஊழியர்களுக்கு தகவல் கொடுப்பார்.
 அவர்கள் உடனடியாக அங்கு சென்று காட்டு தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொள்வார். மேலும், பொதுமக்கள் சாலையோரங்களில் தீ மூட்டுவது, சமையல் செய்வதை தவிர்க்க வேண்டும். வனங்களுக்குள் சென்று சிகரெட் பிடிப்பது, தீ மூட்டுவது போன்ற செயல்களிலும் ஈடுபட வேண்டாம்.
 கோடையில் போதுமான தண்ணீர் மற்றும் உணவு கிடைக்காத நிலையில், விலங்குகள் வனங்களை விட்டு வெளியே வர வாய்ப்புள்ளது. எனவே, விலங்குகளை கண்டு அச்சப்பட வேண்டாம். அதற்கு தொல்லை கொடுக்காமல் உடனடியாக ரேபிட் ரெஸ்பான்ஸ் டீமிற்கு தகவல் கொடுங்கள்.
 அவர்கள், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி விலங்குகளை காட்டிற்குள் விரட்டும் பணிகளை மேற்கொள்வார்கள். நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரையில் தற்போது காட்டெருமைகள் அதிகரித்துள்ளன. எனவே, பொதுமக்கள் காலை மற்றும் இரவு நேரங்களில் தனியாக செல்ல வேண்டாம். குறிப்பாக, சிறிய குழந்தைகளை தனியாக தேயிலை தோட்டங்களுக்கு நடுவே மற்றும் வனங்களை ஒட்டிய பகுதிகளில் நடமாடவோ அல்லது விளையாடவோ அனுமதிக்காதீர்கள். இவ்வாறு சுமேஷ்சோமன் கூறினார்.

Tags : Monitoring center ,forest fire ,district ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்