×

கோயில் திருவிழா ஆடல், பாடலில் மோதல் சம்பவம் நடவடிக்கை எடுக்காத போலீசை கண்டித்து திடீர் சாலைமறியல் மண்ணச்சநல்லூரில் பரபரப்பு

மண்ணச்சநல்லூர், பிப்.15:  மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் கோயில் திருவிழாவையொட்டி  நடைபெற்ற ஆடல்பாடல் நிகழ்ச்சியின்போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்த புகாருக்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நேற்று மண்ணச்சநல்லூரில் ஒரு தரப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ளது பூனாம்பாளையம் ஊராட்சி. இந்த கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலில் கடந்த வாரம் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் கோர்ட் அனுமதி பெற்று ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ராசாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சில இளைஞர்கள் மேடை அருகே சென்று ஆடியதாக கூறப்படுகிறது. அதற்கு உள்ளுர்வாசிகள் கண்டனம் தெரிவித்து தடுத்தனர்.  இதில் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.ம்பவம் நடந்து 2 நாட்கள் கழித்து ராசாம்பாளையத்தை சேர்ந்த சில இளைஞர்கள் பூனாம்பாளையம் சென்றுள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டதில் இருதரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
நேற்று பூனாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தாங்கள் அளித்த புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று போலீசாரை கண்டித்து பூனாம்பாளையம் பகுதி மக்கள் மண்ணச்சநல்லூர்- திருச்சி ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடம் சென்று சமரச பேச்சுவார்த்தை செய்து பின்னர்  போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு சென்றதும் மீண்டும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் டிஎஸ்பி புகழேந்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு
வார்த்தை நடத்தினார். இதில் இருதரப்பைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இருதரப்பினரும் பிரச்சனையின்றி சமாதானமாக செல்வதாக உறுதி அளித்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Temple ,festivals ,protest ,
× RELATED பழநி நகரில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் நடவடிக்கை: நகராட்சி எச்சரிக்கை