×

காங்கிரசார்- போலீசார் இடையே தள்ளுமுள்ளு

புதுச்சேரி,  பிப். 15:  புதுவை கவர்னர் மாளிகை அருகே காங்கிரசார், போலீசார் இடையே  திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த முதல்வர்  நாராயணசாமி, அறவழியில் போராடுமாறு அவர்களுக்கு அறிவுரை கூறினார்.  புதுவையில் தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வரும் முதல்வர்  மற்றும் அமைச்சர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நேற்று காங்கிரஸ் மட்டுமின்றி  திமுக, கம்யூனிஸ்ட், வி.சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச்  சேர்ந்தவர்கள் கருப்பு சட்டை அணிந்தபடி கவர்னர் மாளிகை முன்பு திரண்டனர்.  ஆனால் யாரும் கவர்னர் மாளிகை நுழைவு வாயில் அருகே வந்துவிட முடியாதபடி 4  புறமும் பேரிகார்டுகள் அமைத்து பலத்த தடுப்புவேலி போடப்பட்டிருந்தது.  ஒவ்வொரு தடுப்பு கட்டைகள் முன்பாக உள்ளூர் காவல்துறையினர் மட்டுமின்றி துணை  ராணுவப் படையைச் சேர்ந்த 10, 15 பேர் துப்பாக்கியுடன் பாதுகாப்புக்கு  நிறுத்தப்பட்டிருந்தனர்.

 ஆனால் தர்ணாவில் ஈடுபட்டுள்ள முதல்வர், அமைச்சர்களை  சந்திக்க யாரையும் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. கட்சியின் முன்னணி நிர்வாகிகள்  சிலர் மட்டும் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் வேண்டுகோளை ஏற்று  அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் அனைவரும் ராஜ்நிவாசை சுற்றியுள்ள  பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்தனர். இதனிடையே தலைமை தபால் நிலையம்  வழியாக கவர்னர் மாளிகை வரும் சாலையில் திரண்ட 100க்கும் மேற்பட்ட  காங்கிரசார், தடுப்புக் கட்டைகளை மீறி கவர்னர் மாளிகைக்குள் நுழைய  முயன்றனர். இதை துணை ராணுவமும், போலீசாரும் தடுத்து நிறுத்தியதால்  இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 இதையடுத்து தகவல்  கிடைத்து அங்கு வந்த முதல்வர் நாராயணசாமி அவர்கள் மத்தியில் பேசினார்.  அப்போது காங்கிரஸ்- திமுக ஆட்சி இங்கு நடைபெறுகிறது. மதச்சார்பற்ற கட்சிகள்  அனைத்தும் நமக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. எனவே இந்த தர்ணா போராட்டம்  மிகவும் அமைதியாக நடைபெற வேண்டும். சட்ட பிரச்னைகள் எதையும் எழுப்பக்  கூடாது. நமது தலைவர்கள் நமக்கு எப்படி கற்றுக் கொடுத்திருக்கிறார்களோ?  அதன்படி காந்திய வழியில் போராடி வெற்றிபெற வேண்டும் என்று அறிவுரை  கூறிவிட்டு மீண்டும் அங்கு அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தார்.  இதற்கிடையே முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் 2வது நாளாக தர்ணாவில்  ஈடுபட்டிருந்த இடத்துக்கு நேரில் வந்த சபாநாயகர் வைத்திலிங்கம் அவர்களுடன்  இருக்கையில் அமர்ந்து ஆதரவு தெரிவித்தார். இப்பிரச்னையில் கவர்னர்  கிரண்பேடி தீர்வு காண அவருக்கு உதவி செய்ய தான் தயாராக இருப்பதாக அவர்  கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Congress ,Politicians ,
× RELATED வங்கிக் கணக்கு முடக்கத்தால் நிதிச்...