×

மூசிவாக்கத்தில் தனிநபர் ஆக்கிரமித்த அரசு நிலத்தை மீட்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்: கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

மதுராந்தகம், பிப்.15: படாளம் அருகே உள்ள மூசிவாக்கம் கிராமத்தில் தனிநபர் ஆக்கிரமித்த அரசு நிலத்தை மீட்க கோரி, மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே, நேற்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே மூசிவாக்கம் கிராமத்தில் உள்ள சுமார் 20 சென்ட் அரசு இடத்தை, அப்பகுதியை சேர்ந்த தனிநபர் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்து, பல ஆண்டுகளாக அனுபவித்து வருகிறார்.இதுகுறித்து, அந்த ஊர் மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், கண்டும் காணாமல் இருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில், தனிநபர் ஆக்கிரமிப்பு செய்த அரசு நிலத்தை மீட்க கோரி, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மதுராந்தகம் கோட்டாட்சிய்ர் அலுவலகம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய தொழிலாளர் சங்க கிளை தலைவர் மோகன் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் துர்கா, அமுதா, மாரியம்மாள், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சண்முகம், மாவட்ட துணை செயலாளர் ராஜா, மதுராந்தகம் வட்ட செயலாளர் வாசுதேவன், மாசிலாமணி, பொன்னுசாமி உள்பட ஆண்கள், பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கிராமத்தில் உள்ள சர்வே எண் 149ல் அடங்கியுள்ள 20 சென்ட் அரசு நிலத்தை, தனிநபர் ஆக்கிரமித்து வேலி போட்டு வைத்துள்ளார். அந்த ஆக்கிரமிப்பை அகற்றி, அரசு நிலத்தை மீட்க வேண்டும் என வருவாய் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தோம் ஆனால் நடவடிக்கை இல்லை.அதே கோரிக்கையை வலியுறுத்தி தற்போது இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இனியாவது அரசு அதிகாரிகள், அந்த நிலத்தை மீட்டு கிராம மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றனர்.

Tags : Farmers hunger strike ,land ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...