கருநாக்கமுத்தன்பட்டி அரசு விழாவில் பரபரப்பு

கம்பம், பிப். 14: கம்பம் அருகே உள்ள கருநாக்கமுத்தன் பட்டியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். சப்கலெக்டர் வைத்திநாதன் முன்னிலை வகித்தார்.சமூக பாதுகாப்பு திட்ட உதவித்தொகை, பட்டா மாறுதல், வீட்டுமனைபட்டா, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியங்கள், தொழிலாளர் நலத்துறை சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை என 61 பயனாளிகளுக்கு 11 லட்சத்து 26 ஆயிரத்து 50 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் கார்த்தியாயினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் சாந்தி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் ராமச்சந்திரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் இராஜராஜேஸ்வரி, உத்தமபாளையம் டிஎஸ்பி சீமைச்சாமி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமசுப்பிரமணியன், உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி, வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரன் மற்றம் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முகாமிற்கு வந்த பொதுமக்களிடம் மனு பெறும் நிகழ்ச்சியின்போது திடீரென மேடைக்கு அருகே மக்கள் கூட்டமாக சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே மேடையிலிருந்த அனைவரும் மனுவாங்கினர். உடனே நிகழ்ச்சி முடிந்ததாக தேசியகீதம் இசைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கலெக்டர் உட்பட அதிகாரிகள் வெளியேறிச் சென்றனர். ஆனால் அப்போது மனுவுடன் காத்திருந்த பொதுமக்கள் மனுவாங்க ஆளில்லை என்ற விரக்தியில் மனுவை கீழே வீசினர். இதை பத்திரிக்கையாளர்கள் படம் எடுத்த தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்ததும், சிறிது நேரத்தில் அதிகாரிகள் யாரும் வராமல் ஒரு தலையாரி மட்டும் வந்து அங்கு கிடந்த மனுக்களை எடுத்துச் சென்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

× RELATED பால்குட திருவிழா