×

உலகத்திறனாய்வுத் திட்ட மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்

பெரம்பலூர், பிப்.14: பெரம்பலூர் மாவட்ட அளவிலான உலகத்திறனாய்வுத் திட்ட தடகளப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது.2018-19ம் கல்வி ஆண்டிற்கான உலகத் திறனாய்வுத் திட்டத்தின் கீழ் பள்ளிகளில் 6,7,8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உடல்திறன் போட்டிகள் நடத்தப்பட்டதில் 8,9,10 மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி மாவட்டஅளவிலான தரம்கண்டறிதல் தடகளப் போட்டிகள் பெரம்பலூர் கல்வி மாவட்ட அளவில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை நடைபெற்றது. இதில் தடகள விளையாட்டில் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு 100மீ, 200மீ, 400மீ நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகியப் பிரிவுகளில், மாணவ, மாணவிகள் பயிலும் வகுப்பு வாரியாக தனித்தனியே நடத்தப்பட்டது.

 போட்டிகளை பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்ரமணியராஜா தலைமையில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினயன் தொடங்கி வைத்தார். போட்டிகளை மாவட்ட பயிற்றுநர்கள் கோகிலா, வாசுதேவன், தர்மராஜ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் முன்னின்று நடத்தினர். இதில் பெரம்பலூர் மாவட்ட அளவில் இருந்து 620 மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். இதில் தடகளப் போட்டிகளில் முதல் 2 இடத்தில் வெற்றி பெற்றவர்கள் மண்டல அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.


Tags : District level sports district level tournaments ,
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது